பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை உடன் கைது செய்! போராட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்கள்

Report Print S.P. Thas S.P. Thas in சமூகம்

போராட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்ட பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை உடனடியாக கைது செய்யக் கோரி வெஸ்ட்மின்ஸ்டர் நீதவான் நீதிமன்றிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு, பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தின வைபவம், பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றபோது, அந்த அலுவலகத்திற்கு வௌியில் புலம்பெயர் தமிழ் மக்களால் எதிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இப்போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களைப் பார்த்து கழுத்தறுக்கப்படும் என்றவாறு சைகை காண்பித்தார் என குற்றம்சாட்டப்பட்டதுடன் காணொளிகளும் வெளியாகியிருந்தன.

இதனையடுத்து அவருக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் கருத்துக்களையும் கண்டனங்களையும் வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் இச் சம்பவத்தில் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) வெஸ்ட்மின்ஸ்டர் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இன்று காலை 10 மணி முதல் கடுங்குளிருக்கும் மத்தியில் புலம்பெயர் தமிழர்கள் தமிழ் மக்களுக்கு ஒரு நீதி கிடைக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி நீதிமன்றத்திற்கு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இப்போராட்டத்தின் போது பிரித்தானியாவின் நீதித்துறையில் அரசியல் இருக்கக்கூடாது என்றும், போர்க் குற்றவாளியான பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை உடனடியாக கைது செய்யக் கோரியும் போராட்டக்காரர்களால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இப்போராட்டத்தின்போது “இனப்படுகொலை செய்த யுத்த குற்றவாளிகளை பிரித்தானியாவுக்குள் அனுமதியாதே”, “இலங்கைக்கு வழங்கும் இராணுவ உதவிகளை உடனே நிறுத்து”, “பிரித்தானியாவில் ஜனநாயக ரீதியில் போராடுபவர்களின் விபரங்களை இலங்கை தூதரகம் சேகரிப்பதை அனுமதியாதே” என்று போராட்டக்காரர்களால் முழுக்கமிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers