தேர்தல் அதிகாரிகளின் அசமந்த போக்கினால் ஜனநாயக உரிமையை தவறவிட்ட மக்கள்!

Report Print Kanmani in சமூகம்
283Shares

கடந்த 16ம் திகதி 2019 ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றிருந்த நிலையில் தனது ஜனநாயக உரிமையை நிலை நாட்டுவதற்காக பல பகுதிகளிலிருந்தும் மக்கள் வாக்களிக்க தமது சொந்த இடங்களுக்கு சென்றிருந்தனர்.

இந்நிலையில் தாம் பல சிரமங்களுக்கு மத்தியில் வாக்களிக்கச் சென்றும் அரச அதிகாரிகளின் அசமந்த போக்கினால் தம்மால் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்ததாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட நபரொருவர் கருத்து தெரிவிக்கையில்,

நான் நுவரெலியா மாவட்டம், நுவரெலியா, மஸ்கெலியா தேர்தல் தொகுதி, 475/H - நாகசேன எனும் கிராம அலுவலகர் பிரிவில் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக வாக்களித்து வருகின்றேன்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் எனது அடையாள அட்டையினை நான் புதிப்பித்திருந்தேன்.

இதன்போது புதிய அடையாள அட்டை இலக்கத்திற்கும், பழைய அடையாள அட்டை இலக்கத்திற்கும் இடையில் வித்தியாசங்கள் காணப்பட்டதாக தெரிவித்து என்னை வாக்களிக்க முடியாதென கூறி தேர்தல் கடமையில் இருந்த அதிகாரிகள் வெளியேற்றினர்.

இதன்போது இது குறித்து 475/H - நாகசேன எனும் கிராம அலுவலகரை நான் தொடர்பு கொண்டு வினவிய போது அசமந்த போக்கிலேயே பொறுப்பற்ற முறையில் பதிலளித்தனர்.இதனால் என்னால் வாக்களிக்க முடியாது போயுள்ளது.

எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்துமாறும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து நுவரெலிய பிரதேச சபையின் மாவட்ட செயலாளர் எம்.பி.ஆர்.புஸ்பகுமாரவை தொடர்பு கொண்டு வினவிய போது, சம்பந்தப்பட்டவர்கள் இது குறித்து முறைப்பாடொன்றினை பதிவு செய்தால் 24 மணித்தியாலயத்திற்குள் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் தெரிவித்தார்.

இந்நிலையில் இது குறித்து பிரதி தேர்தல் ஆணையாளர் சிவசுப்ரமணியம் அச்சுதனை தொடர்பு கொண்டு வினவிய போது, இவ்வாறு பதிலளித்துள்ளார்.

அடையாள அட்டைகளில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள்,இலக்க வித்தியாசங்கள் குறித்து தேர்தல் ஆணைக்குழு தேர்தல் மேற்பார்வை அதிகாரிகளுக்கு தகுந்த விளக்கங்களையும்,தெளிவினையும் அளித்துள்ளது.

இருப்பினும் இவ்வாறு பொறுப்பற்ற முறையில் செயற்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக முறைப்பாடொன்றினை மேற்கொண்டால் தாம் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தகுந்த தெளிவின்றி வாழும் மக்கள் மத்தியில் கல்வி பயின்று பொறுப்பான உயர் பதவிகளில் பணி புரியும் அரச அதிகாரிகள் தெளிவின்றி செயற்பட்டு சாதாரண அப்பாவி மக்களின் வாழ்வில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு மூல காரணமாக அமைவது அனைத்து மக்கள் மத்தியிலும் வெறுப்பினையும், அரச அதிகாரிகளின் மீதுள்ள நம்பிக்கையையும் இழக்க செய்துள்ளது.