கல்முனையில் போக்குவரத்து பொலிஸாரின் நடவடிக்கை

Report Print Varunan in சமூகம்

கல்முனை பிரதேசத்தில் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனையில் பல வாகன சாரதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்தியத்தில் கல்முனை சுற்றுவட்டம், நற்பிட்டிமுனை பிரதான சந்தி, தாளவட்டுவான் சந்தி, பாண்டிருப்பு போன்ற இடங்களில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை விசேட போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது நூற்றுக்கும் மேற்பட்ட வாகன சாரதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விசேட கடமைக்காக பிராந்திய பொலிஸ் நிலையங்களில் இருந்து பேருந்து வண்டியில் ஏற்றி வரப்பட்ட பொலிஸார் முக்கிய சந்திகளில் நிலை நிறுத்தப்பட்டனர்.

இதன் போது விழிப்பூட்டல் செயற்பாடுகள் மற்றும் இளைஞர்கள் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துவது, தலைக்கவசம் அணிவதில்லை, ஒரு மோட்டார் சைக்கிளில் இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் பயணிப்பது, அதிவேகமாக செல்வது தொடர்பாக வாகன உரிமையாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இச்சோதனை நடவடிக்கையானது அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜி.எச்.மாரப்பனவின் வழிகாட்டலில் இடம்பெற்றதுடன் கல்முனை பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸாருடன் இணைந்து இராணுவத்தினர் இணைந்து முக்கிய சந்திகள், பிரதான வீதிகளில் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதன் போது 100ற்கும் அதிகமான சாரதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் 60ற்கும் மேற்பட்ட சாரதிகளுக்கு எதிராக தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த சோதனை நடவடிக்கையில் தலைக்கவசம் சீராக அணியாமை, மோட்டார் சைக்கிளின் பக்க கண்ணாடி இன்மை, சாரதி அனுமதிப்பத்திரம் இன்மை, அதிக சத்தம் எழுப்பும் ஹோன் போன்ற பல்வேறு குற்றங்களுக்காகவே சாரதிகளுக்கு தண்டம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.