பாணந்துறை வீதிகளில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு!

Report Print Kamel Kamel in சமூகம்

பாணந்துறை வீதிகளில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மேல் மாகாணத்தில் அமைந்துள்ள பாணந்துறை நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் காணப்படும் வீதிகளுக்கான பெயர் பலகைகளில் இவ்வாறு தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

திட்டமிட்ட அடிப்படையில் தமிழ் மொழி உதாசீனம் செய்யப்பட்டு தனிச் சிங்கள மொழியில் வீதிகளின் பெயர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு தனிச் சிங்கள மொழியில் வீதிகளின் பெயர்ப் பலகைகள் காட்சிப்படுத்தப்படுவது சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டு குறித்த சில படங்களும் சமூக ஊடகங்களில் உலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

குறித்த பதிவில்,

பெரும்பான்மைவாதத்தின் கோர முகம் மீளவும் தலை தூக்கத் தொடங்கியுள்ளது.

தேர்தல் நடைபெற்று முடிந்து ஒரு வார காலம் முடிந்துள்ள நிலையில் இவ்வாறு பெரும்பான்மையினவாதம் தலைதூக்கத் தொடங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் வீதிகளின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் பதிலுக்காக காத்திருப்பதாக மங்கள சமரவீர தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.