எக்னெலிகொட வழக்குடன் தொடர்புடைய இராணுவ புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர்களுக்கு பிணை

Report Print Kamel Kamel in சமூகம்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்திச் செல்லப்பட்டு காணாமல்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்குடன் தொடர்புடைய இராணுவப் புலனாய்வு உத்தியோகத்தர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த இராணுவப் புலனாய்வு உத்தியோகத்தர்களை முன்பிணை அடிப்படையில் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மேலும், சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஒன்பது புலனாய்வு உத்தியோகத்தர்களுக்கு எதிராகவும் குற்றப் பத்திரிகை இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டதுடன், சந்தேகநபர்களிடம் வெளிநாட்டு கடவுச் சீட்டுக்கள் இருந்தால் அவற்றை ஒப்படைக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களின் கைவிரல் அடையாளங்களை பெற்றுக்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

கிரத்தலை இராணுவ முகாமின் கட்டளை அதிகாரியாக கடமையாற்றிய லெப்டினன் கேணல் ஷம்மி குமாரரட்ன உள்ளிட்ட ஒன்பது இராணுவ உத்தியோகத்தர்கள் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.