எந்த தடைகள் வந்தாலும் முல்லைத்தீவில் மாவீரர் தினம் நடைபெறும்!

Report Print Theesan in சமூகம்

எந்த தடைகள் தொடர்ந்தாலும் கடலில் காவியமாகியவர்களுக்கு மாவீரர் நாள் நிகழ்வு முல்லைத்தீவு கடற்கரையில் இடம்பெறும் என இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பீற்றர் இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு கடற்கரையில் நேற்றைய நாளில் முன்னெடுக்கப்பட்ட மாவீரர் நாள் நிகழ்வுக்கான வேலைகளை உடன் நிறுத்துமாறு முல்லைத்தீவு பொலிஸார் எச்சரித்துள்ளனர். இது தொடர்பில் இளஞ்செழியன் எமது செய்தியாளரை தொடர்புகொண்டு கருத்துதெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும்,

நேற்றைய தினம் முல்லைத்தீவு கடற்கரையில் மாவீரர் தின நிகழ்வுகளை முன்னிட்டு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அங்கு வந்த முல்லைத்தீவு பொலிஸார் அவற்றை நிறுத்துமாறு கூறி எமக்கு தடையேற்படுத்தினர்.

இதன்போது அங்கு வந்திருந்த பொலிஸாரிடம் மாவீரர் நாள் நிகழ்வானது தொடர்ந்து 5ஆவது வருடம் இங்கு நடைபெறுவதற்கு ஏற்பாடு நடைபெறுகிறது.

கடந்த 4 வருடங்களாக நாம் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்காது மாவீரர் நிகழ்வை நடத்தி வந்ததை போல இம்முறையும் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்காது அந்த நிகழ்வை நடத்துவோம்.

தொடர்ந்து பொலிஸார், இங்கு வித்துடல்கள் புதைக்கப்பட்டதா? இல்லை ஆகவே இவ் இடத்தில் மாவீரர் நாள் நிகழ்வு நடத்தக் கூடாது என கூறினர். தொடந்தும் பல கேள்விகளை தொடுத்தனர்.

அவர்களின் கேள்விகளுக்கு, எனக்கு அறிவு எட்டிய காலத்தில் இருந்து கடலில் காவியமாகிய அனைவருக்கும் இவ்விடத்திலே மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்தேன்.

இவ் இடத்தில் இராணுவம் இருந்தால் எம் மாவீரர்களுக்கு எங்கு அஞ்சலி செலுத்துவது என்று வினவியதுடன் இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிவமோகனின் கவனத்திற்கு கொண்டுசென்றேன்.

அவர் முல்லைத்தீவு பொலிஸ் நிலைய தலைமை அதிகாரியுடன்(HQ) தொடர்பு கொண்டு மாவீரர் நாள் நிகழ்வை தடை இன்றி நடத்த அனுமதி பெற்றுத்தந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.