எமது உறவுகளை நினைவுகூர எவரும் தடையாக இருக்காதீர்! சம்பந்தன் கோரிக்கை

Report Print Rakesh in சமூகம்

இன்று நவம்பர் 27ஆம் திகதி. தமிழரின் உரிமைகளுக்காக ஆயுத வழியில் போரிட்டு தமது உயிர்களை அர்ப்பணித்த எமது உறவுகளை நினைவுகூரும் நாள். எனவே, இந்தக் கடமையை எமது சமூகம் இன்று சுதந்திரமாகச் செய்ய வேண்டும். இதற்குத் தடையாக எந்தத் தரப்பும் இருக்கவே கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகம் ஒன்றிற்கு அவர் தெரிவிக்கையில்,

2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் தமிழரின் ஆயுதப் போராட்டத்தில் தமது உயிர்களை அர்ப்பணித்த எமது உறவுகளை எமது சமூகம் சுதந்திரமாக நினைவுகூர்ந்து வந்தது. அதற்கு முன்னர் தடைகள் இருந்த போதிலும் அந்தத் தடைகளைத் தகர்த்தெறிந்தும் எமது உறவுகளை எமது சமூகம் நினைவுகூர்ந்தது.

போரில் உயிரிழந்த எமது உறவுகளை நினைவேந்துவதைத் தடுப்பது மாபெரும் மனித உரிமை மீறலாகும். எனவே, இன்று எமது உறவுகளை நினைவுகூர்வதை எந்தத் தரப்பும் தடுக்கவே கூடாது.

தற்போது பதவியேற்றுள்ள புதிய அரசு இந்த விடயத்தில் தவறான முடிவுகள் எதனையும் எடுக்கவேகூடாது என குறிப்பிட்டுள்ளார்.