புதிய அரசு அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது: சிவமோகன் எம்.பி குற்றச்சாட்டு

Report Print Mohan Mohan in சமூகம்

மாவீரர்களுக்கு பொதுமக்கள் உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தும் இன்றைய நாளில் புதிய அரசு தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

1990ஆம் ஆண்டு விமானத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு இன்று ஒட்டுசுட்டான் பகுதியில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் அங்கு உரையாற்றுகையில்,

மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக 1990ஆம் ஆண்டு இதே போன்றதொரு நாளில் ஒன்று கூடிய பொதுமக்கள் மீது இலங்கை விமானப்படையினர் குண்டுவீசி தாக்குதல் நடத்தினர்.

இதன்போது சம்பவ இடத்திலயே 12 அப்பாவி பொதுமக்கள் பலியாகினர் மேலும் 50இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகாயமடைந்தனர்.

இந்த கொடூர தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி பொதுமக்களுக்கு நாங்கள் இன்று அஞ்சலி செலுத்தி நிற்கின்றோம்.

இதேவேளை தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடி வீரமரணமடைந்த மாவீரர்களுக்கு நவம்பர் 27ஆம் திகதி உணர்வுபூர்வமாக பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்

இந்தநிலையில் இம்முறை மாவீரர் தினம் அனுஷ்டிப்பதை எதிர்த்து புதிய அரசங்கத்தினால் பல்வேறு அடக்கு முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

இவ்வாறாக தமிழ்மக்கள் மீதான அடக்குமுறைகளை புதிய அரசு கைவிடவேண்டும் பொதுமக்கள் சுதந்திரமாக கண்ணீர் அஞ்சலி செத்துவதற்கு வழிவிடவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.