யாழ்தேவிக்கு நேர்ந்த கதி! வடக்கின் அனைத்து புகையிரத பயணங்களும் ரத்து

Report Print Varun in சமூகம்

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை மற்றும் கல்கிஸ்ஸை வரை பயணத்தை மேற்க்கொண்ட யாழ்தேவி கடுகதி புகையிரதம் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று மாலை 3.45 மணியளவில் இந்த விபத்து குருநாகல் கல்கமுவ புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் இடம்பெற்றதாக கல்கமுவ புகையிரத நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

4 புகையிரத பெட்டிகள் சேதமடைந்திருப்பதுடன் காயமடைந்தவர்கள் தொடர்பிலான விபரம் உடனடியாக அறியமுடியவில்லை என கல்கமுவ புகையிரத நிலைய பொறுப்பதிகாரி எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

இதுவரை காயங்களுக்குள்ளான 5 பேர் கல்கமுவ ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த விபத்தின் காரணமாக வடக்கு புகையிரத பாதையின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை புகையிரத பாதைக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக வடக்கு புகையிரத பாதையின் போக்குவரத்து நடவடிக்கைகள் கொழும்பிலிருந்து மாஹோ புகையிரத நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் புகையிரதங்கள் அம்பன்பொல புகையிரத நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இன்று இரவு வடக்கு புகையிரத பாதையின் அனைத்து புகையிரத பயணங்களும் இரத்து செய்யப்பட்டிருப்பதாக புகையிரத கட்டுப்பட்டு நிலையம் அறிவித்துள்ளது.