ஐயங்கன்குளம் படுகொலையின் 12ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வுகள்

Report Print Gokulan Gokulan in சமூகம்

ஐயங்கன் குளம் பகுதியில் இராணுவத்தினரின் கிளைமோர்த் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் 12ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

முல்லைத்தீவு - துணுக்காய், ஐயங்கன் குளம் பகுதியில், கடந்த 2007ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் திகதியன்று ஐயங்கன்குளத்திலிருந்து மல்லாவி நோக்கி பயணித்த நோயாளர் காவு வண்டிக்கு, ஐயங்கன் குளம், அம்பலவி வெட்டை என்ற இடத்தில் இலங்கை இராணுவத்தினரால் கிளைமோர்த் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இராணுவத்தினரின் இந்த தாக்குதலால், அந்த நோயாளர் காவுவண்டியில் பயணித்த முதலுதவி கற்கைநெறிகளைப் பயின்ற ஆறு மாணவிகள் மற்றும் சுகாதாரத் தொண்டர்கள் இருவருமாக எட்டுப்பேர் பலியாகினர்.

இதனை நினைவு கூறும் முகமாக இன்று இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில், முதன்மைச் சுடரேற்றப்பட்டுள்ளது.

அத்துடன் படுகொலை செய்யப்பட்டவர்களைப் புதைத்த இடத்தில் அவர்களுடைய திரு உருவப்படம் வைக்கப்பட்டு, உறவினர்களால் விளக்கேற்றப்பட்டு, பூத்தூவி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

குறித்த படுகொலைச் சம்பவத்தில் இரு பிள்ளைகளை இழந்த தாயாரான நாகரத்தினம் வசந்தமல்லிகா, அஞ்சலி நிகழ்வில் பொதுச்சுடரினையேற்றிவைத்தார்.

அஞ்சலி நிகழ்வுகளைத் தொடர்ந்து, படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அவர்களின் உறவினர்களுக்கு, அஞ்சலி நிகழ்வின் ஏற்பாட்டாளர்களால் தென்னங் கன்றுகளும் வழங்கிவைக்கப்பட்டன.

மேலும் இந்த நிகழ்வில் துணுக்காய் பிரதேசசபை உறுப்பினர் ச.சுயன்சன், படுகொலைசெய்யப்பட்டவர்களது உறவினர்கள், ஐயன்கன்குளம் கிராம மக்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.