வவுனியாவில் 25 பேருக்கு எயிட்ஸ் நோய்: வைத்தியர் சந்திரகுமார்

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் கடந்த16 வருட காலப்பகுதியில் 25பேர் எயிட்ஸ் நோயாளிகளாக இனம் காணப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரி கு.சந்திரகுமார் தெரிவித்தார்.

எயிட்ஸ் நோய் தொடர்பாக ஊடகவியலாளர்களிற்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்படி தெரிவித்தார்

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

உலக எயிட்ஸ் தினம் மார்கழி மாதம் 1ஆம் திகதி உலகம் முழுவதும் கடைப்படிக்கப்பட்டு வருகின்றது. வவுனியாவிலும் பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ்தடுப்பு பிரிவினரால் இம்முறை நினைவு கூரப்படவிருக்கின்றது.

“சமூகங்கள் நிலைமையை மாற்றலாம்” என்ற தொனிப்பொருளில் இம்முறை உலக எயிட்ஸ் தினம் அனுஸ்டிக்கபடவிருக்கின்றது.

இலங்கையில் இதுவரை 3507 எயிட்ஸ் நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 2391 ஆண்களும், 1116 பெண்களும் காணப்படுகின்றனர். வவுனியா மாவட்டத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை 25எயிட்ஸ் நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளனர்.

நடப்பாண்டில் இதுவரையான காலப்பகுதியில் ஒரு நோயாளி இனம்காணப்பட்டுள்ளார்.

அவர்களில் 12பேர் மாத்திரமே உயிருடன் இருக்கின்றனர். அவர்களிற்கான சிகிச்சைகள் எம்மால் வழங்கபட்டு வருகிறது. இதேவேளை கடந்த மாதமளவில் வவுனியாவில் எயிட்ஸ் நோயாளி ஒருவர் சாவடைந்துள்ளார்.

அவருக்கு நோய் தொற்று ஏற்பட்டு நீண்ட காலத்திற்கு பின்னர் கண்டறியப்பட்டதால் அவர் நிமோணியா காய்ச்சல் ஏற்பட்டு சாவடைந்துள்ளார்.

எயிட்ஸ் நோய் பரவுவதற்கான மூன்று காரணங்களில் எச்ஐவி தொற்றுள்ள ஒருவருடன் பாலியல் ரீதியாக தொடர்பு கொள்ளல், நோய் தொற்றுள்ள ஒருவரின் குருதியை இன்னுமொருவருக்கு செலுத்துதல், தொற்றுள்ள தாய் ஒருவருக்கு பிறக்கின்ற பிள்ளை ஆகியோருக்கு இந்த நோய்பரவுகிறது.

எனினும் தாய் மூலம் பிறக்கின்ற பிள்ளைகளுக்கு நோய் தொற்று ஏற்படுவதினை இலங்கையில் முற்றாக தடுத்துள்ளோம். கர்பிணி பெண்களிற்கு அவர்களது இணக்கத்துடன் எச்.ஜ.வி, பரிசோதனைகள் மேற்கொள்வதால் அது சாத்தியமாக்கப்பட்டுள்ளது.

வவுனியாவை பொறுத்தவரை இங்கு நோய் தொற்று ஏற்படுவதற்கு பிரதான காரணமாக விபச்சாரம் காணப்படுகின்றது. வேறு மாவட்டங்களில் இருந்தும் விபசார தொழிலாளர்கள் இங்கு வருகை தருகின்றனர்.

எனவே எயிட்ஸ் நோய் தொடர்பாக இளைஞர்கள், இராணுவத்தினர், பொலிசார், மாணவர்கள் ஆகியோருக்கு பல்வேறு தெளிவுபடுத்தல்களை நாம் மேற்கொண்டு வருகிறோம்.

சாதாரணமாக நோயை குருதியில் இனம் காண்பதற்கு மூன்று மாதங்கள் தேவையாகவிருந்தது. தற்போது புதியமுறைகள் வந்துள்ளமையால் பத்து நாட்களிலிருந்து, ஒரு மாதகாலத்திற்குள் இனம் காண முடியும். அந்த காலப்பகுதி என்பது எமக்கு மிகவும் கடினமானதாகவும், சவால் நிறைந்ததாகவும் இருக்கிறது.

ஏனெனில் அந்த காலத்திற்குள் மீண்டும் பாதுகாப்பற்ற பாலியல் உறவில் ஈடுபடுவதால் பலருக்கு நோய்தொற்றும் சந்தர்ப்பம் அதிகமாக இருக்கிறது.

எச்.ஜ.வி வைரஸ் ஒருவருக்கு தொற்றினால் அது எயிட்ஸ் நோயாக மாறுவதற்கு 8 தொடக்கம் 10 வருடங்கள் எடுக்கிறது. நோய்தொற்று ஏற்பட்டவர் சாதாரண ஒரு மனிதரை போலவே இருப்பர். அவரது முகத்தை வைத்து நோயை கண்டுபிடிக்க இயலாது.

குருதியினை பரிசோதனை செய்வதன் மூலம் மாத்திரமே அதனை கண்டுபிடிக்க முடியும். ஒரு தரமாவது பரிசோதனையை மேற்கொண்டால் குறித்த நோய் மற்றவர்களிற்கு தொற்றாமல் தடுக்கலாம். வவுனியா வைத்திய சாலையில் நோயாளர்களாக அனுமதிக்கபடும் சிலருக்கு எச்.ஜ.வி பரிசோதனை மேற்கொள்ளபடுகிறது.

தாமாகவும் சிலர் வருகை தந்து பரிசோதனையை மேற்கொள்கின்றனர். எனினும் அது குறைவாக காணப்படுகின்றது. எனவே வவுனியா வைத்தியசாலையில் அமைந்துள்ள பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு பிரிவில் பொதுமக்கள் தாமாகவந்து பரிசோதனைகளை மேற்கொள்ளமுடியும். இங்கு பரிசோதனைகள் மேற்கொள்பவர்களது இரகசியங்கள் பாதுகாக்கப்படும் என மேலும் தெரிவித்தார்.

Latest Offers