பொலிஸ் ஊடகப் பிரிவின் தொலைபேசிகள் இயங்கவில்லை

Report Print Steephen Steephen in சமூகம்

கடந்த சில வருடங்களாக ஊடகங்களுக்கு தகவல்களை வழங்கிய பொலிஸ் ஊடகப் பிரிவின் சகல சேவை நடவடிக்கைகளும் இன்று இயங்கவில்லை.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தொலைபேசி இலக்கம் மட்டுமல்லாது பொலிஸ் ஊடகப் பிரிவின் அனைத்து தொலைபேசிகளும் இன்று இயங்கவில்லை.

பொலிஸ் ஊடகப் பிரிவின் மூலம் நாடு முழுவதும் அன்றாடம் நடக்கும் சம்பவங்கள் தொடர்பான அறிக்கை மின்னஞ்சல் மூலம் தினமும் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இன்று பிற்பகல் வரை அவ்வாறான அறிக்கை ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை.

இது குறித்து அறிய ஊடகங்கள் பொலிஸ் ஊடகப் பேச்சாளரை தொடர்புகொள்ள முயற்சித்த போதிலும் அவரது கையடக்க தொலைபேசி அணைக்கப்பட்டிருந்தது.

பொலிஸ் ஊடகப் பிரிவின் நடவடிக்கைகள் பாதுகாப்பு அமைச்சின் கேந்திர நிலையத்தின் ஊடாக மேற்கொள்ளும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இந்த வேலைத்திட்டத்திற்காக பதில் பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் பொலிஸ் ஊடகப் பிரிவின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் ஊடகப் பிரிவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் வலைத்தள கணக்கும் கடந்த 25ஆம் திகதி முதல் புதுப்பிக்கப்படவில்லை.

பொலிஸ் ஊடகப் பிரிவில் 60இற்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் பணியாற்றி வந்தனர். இது சம்பந்தமான தகவல்களை பெற பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவை ஊடகங்கள் தொடர்புக்கொண்ட போதிலும் அவர் தொலைபேசியில் பதிலளிக்கவில்லை.