வீரமறவர்களை நினைவேந்த ஒன்றுதிரண்ட தமிழ் உறவுகள்

Report Print Rakesh in சமூகம்

தாயக விடுதலைக்காகத் தமது இறுதி மூச்சுவரைப் போராடி - களமாடி தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய வீரமறவர்களுக்கு - மாவீரர்களுக்கு - உயிர்க்கொடையாளர்களுக்கு - நாயகர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் இன்று தமிழர் தாயகமான வடக்கு - கிழக்கில் பேரெழுச்சியுடன் உணர்வுபூர்வமாக நடைபெற்றன.

தாயகத்தில் உள்ள துயிலும் இல்லங்களில் உள்ள மாவீரர் கல்லறைகள் இன்று மாலை கண்ணீரால் நனைந்தன.

வடக்கு - கிழக்கில் மாவீரர் நாள் நினைவேந்தல் பேரெழுச்சியுடன் நடைபெற்றது.

கடந்த 4 வருடங்களைப் போலல்லாமல் வடக்கு - கிழக்கில் இம்முறை மாவீரர் நாள் நிகழ்வுகளுக்குப் பொலிஸார், இராணுவத்தினர் தடைகளை ஏற்படுத்தியபோதும் மக்கள் இவற்றைக் கண்டு அஞ்சாமல் வீரமறவர்களுக்குத் துணிவுடன் துயிலும் இல்லங்களுக்குச் சென்று சுடரேற்றினர்.

தாயகத்தில் உள்ள அனைத்துத் துயிலும் இல்லங்களிலும் இன்று மாலை சம நேரத்தில் சுடர்கள் கொழுந்து விட்டு எரிந்தன. அந்த ஒளி வெள்ளத்தின் மத்தியில் மக்கள் கண்ணீர் விட்டுக் கதறி அழுது தமது உறவுகளை நினைவுகூர்ந்தனர்.

மாவீரர் துயிலும் இல்லங்கள், நினைவுத் தூபிகள், பல்கலைக்கழகங்கள் என்பவற்றில் இன்று மாவீரர் நாள் உணர்வுபூர்வமாகக் கடைப்பிடிக்கப்பட்டன.

துயிலும் இல்லங்களில் சிவப்பு, மஞ்சள் கொடிகள் பட்டொளி வீசிப் பறந்தன. மாவீரர் எழுச்சிக் கீதங்கள் காலையிலிருந்து ஒலிக்கவிடப்பட்டிருந்தன.

மாலை 6.02 மணிக்கு மணி ஒலி எழுப்பப்பட்டு, 6.05 மணிக்கு ஈகச்சுடரேற்றல் நிகழ்வு நடைபெற்றது. மாவீரர்கள் நினைவான ஈகச் சுடர்கள் கொழுந்துவிட்டு எரிந்தன. அதனைத் தொடர்ந்து, மாவீரர் துயிலும் இல்லப்பாடல் ஒலிக்கவிடப்பட்டது.

பாடல் இசைக்கப்பட்டபோது, மாவீரர்களின் பெற்றோர், சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் உயிர்நீத்த தமது சொந்தங்களை நினைத்துக் கதறி அழுதனர். கல்லறைகள் இருந்த இடங்களைக் கட்டியணைத்து ஒப்பாரி வைத்தனர். அந்தக் காட்சி துயிலும் இல்லங்களில் கூடியிருந்தவர்களை நிலைகுலைய வைத்தது.