ஊடகவியலாளர்களை சீ.ஐ.டிக்கு அழைத்ததை வன்மையாக கண்டிக்கும் ஊடகவியலாளர்கள் சங்கம்

Report Print Steephen Steephen in சமூகம்

இணையத்தள ஊடக நிறுவனத்தில் சேவையாற்றும் ஊடகவியலாளர்களை குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு அழைத்ததை வன்மையாக கண்டிப்பதாக இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சங்கத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினமும் இவ்வாறான சம்பவம் தொடர்பான செய்தி வெளியாகியது. இணையத்தள ஊடக நிறுவனத்தின் பெண் ஊடகவியலாளர் ஒருவரிடம் வாக்குமூலம் பெற அவரை குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு அழைத்து 4 மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

உரிய காரணங்கள் இன்றி இவ்வாறு ஊடகவியலாளர்களிடம் வாக்குமூலங்களை பெறுவது மற்றும் விசாரணைகளை நடத்துவது என்பன ஊடக சுதந்திரம் மற்றும் ஊடகங்களுக்கு ஏற்படுத்தும் அழுத்தங்களாகும் என உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் இதுவரை இயங்கி வந்த பொலிஸ் ஊடகப் பிரிவின் பணிகள் பாதுகாப்பு அமைச்சின் ஊடக கேந்திர நிலையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டமையை வன்மையாக கண்டிப்பதாகவும் உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கம் கூறியுள்ளது.

இப்படியான தடைகள் இன்றி சுதந்திரமாக தமது ஊடக செயற்பாடுகளில் ஈடுபட ஊடகவியலாளர்களுக்கு தேவையான பின்னணி உருவாக்கும் என எதிர்பார்ப்பதாக உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் துமிந்த சம்பத், சங்கத்தின் செயலாளர் பிராங்க் டி சொய்சா ஆகியோரின் கையெழுத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.