மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடரும் கடும் மழை வீழ்ச்சி! அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை

Report Print Navoj in சமூகம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக தாழ் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாகரை, வாழைச்சேனை, ஓட்டமாவடி, கிரான் போன்ற பிரதேசத்திலுள்ள பல வீதிகளில் நீர் அதிகமாக காணப்படுவதுடன், சிலரது குடியிருப்பு காணிக்குள் நீர் காணப்படுவதால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில் வெள்ளிக்கிழமை காலை முதல் மட்டக்களப்பு நகரில் 102.4 மில்லி மீற்றர், நவகிரி ஆறு 96.1 மில்லி மீற்றர், தும்பங்கேணி 74.0 மில்லி மீற்றர், மயிலம்பாவெளி 65.3 மில்லி மீற்றர், பாசிக்குடா 23.0 மில்லி மீற்றர், உன்னிச்சை 111.0 மில்லி மீற்றர், வாகனேரி 40.7 மில்லி மீற்றர், கட்டுமுறிவு குளம் 27.0 மில்லி மீற்றர், உறுகாமம் 103.5 மில்லி மீற்றர், கிரான் 20.5 மில்லி மீற்றரும் மழை வீழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலைய அதிகாரி கே.சூரியகுமார் தெரிவித்துள்ளார்.

அத்தோடு தொடர் மழை காரணமாக வாழைச்சேனை, பாசிக்குடா, வாகரை, ஓட்டமாவடி போன்ற பகுதிகளில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் காலநிலை மாற்றம் காரணமாக மீன்பிடிக்கச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்யும் சந்தர்ப்பத்தில் குளங்களில் வான் கதவுகள் திறக்கும் பட்சத்தில் பல தாழ்நில கிராமங்கள் நீரில் மூழ்கும் நிலை உருவாகக்கூடும் என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனர்த்தக் குழு தொடர்ந்தும் தயார் நிலையில் செயற்பட்டு அனர்த்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதுடன், படகுச்சேவை, அனர்த்த நிவாரண சேவை, பாதுகாப்பு பிரிவு, பொதுமக்கள் மற்றும் முப்படையினர் தயார் நிலையில் இருப்பதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பிரதான குளங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன், நீர் நிலைகளிலும் நீர் மட்டம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மழைக்காரணமாக நாவற்குடா கிழக்கு பகுதியில் வாழ்கின்ற மக்களின் இயல்பு நிலை முற்றாக பாதிக்கப்பட்ட நிலையில் நாவற்குடா ஆரம்பப் பாடசாலையில் 25 குடும்பங்களை சேர்ந்த 87 பேர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்களுக்கான சமைத்த உணவுகள் மற்றும் அடிப்படை வசதிகளை மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாரின் பணிப்புரைக்கமைவாக மாவட்ட அனர்த்த நிவாரண நிலையத்தின் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றது.