பொய்யான முறைப்பாட்டை செய்து சிக்கிக்கொண்ட யுவதி

Report Print Steephen Steephen in சமூகம்

தனது விருப்பமின்றி தன்னை காதலன் பலவந்தமாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறி பொரலஸ்கமுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த யுவதிக்கு எதிராக குற்றச்சாட்டு பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு நுகேகொடை நீதவான் எச்.யு.கே.பெல்பொல பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

முறைப்பாடு தொடர்பாக விசாரணை நடத்திய பொரலஸ்கமுவ பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய நபரை அழைத்து வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொண்டனர்.

பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கிய குறித்த நபர், முறைப்பாடு செய்த யுவதியும் தானும் தொலைபேசி மூலம் அறிமுகமாகி காதலித்து வந்ததாக கூறியுள்ளார்.

இருவரும் காதலித்து வந்த போது, “நாம் இருவரும் ஓடி போகலாம்” என யுவதி யோசனை கூறியதாகவும் அதனை தான் மறுத்ததால், கோபம் கொண்ட யுவதி தனக்கு எதிராக பொய்யான முறைப்பாட்டை செய்துள்ளதாகவும் தான் யுவதியை துஷ்பிரயோகம் செய்யவில்லை எனவும் அந்த நபர் வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

யுவதியின் காதலன் என கூறப்படும் குறித்த நபரிடம் வாக்குமூலத்தை பெற்றுக்கொண்ட பொலிஸார், யுவதியை மருத்துவ பரிசோதனைக்காக களுபோவில போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பியுள்ளனர்.

யுவதி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகவில்லை என சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பொரலஸ்கமுவ பொலிஸார நீதிமன்றத்தில் தெரிவித்த விடயங்களை கவனத்தில் கொண்ட நீதவான், பொலிஸ் மற்றும் நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தியமை சம்பந்தமாக முறைப்பாடு செய்த யுவதிக்கு எதிராக குற்றச்சாட்டு பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.