வவுனியா மாணவன் செய்த வரலாற்றுச் சாதனை! நெகிழ்ச்சியடைந்த பாடசாலை சமூகம்

Report Print Theesan in சமூகம்

வவுனியா வேலங்குளம் கோவில் மோட்டையை சேர்ந்த ஜெயசங்கர் அட்சயன் என்ற 10 வயது மாணவன் முதலாமாண்டில் இருந்து 5 ஆம் ஆண்டு வரையான 5 வருட காலப்பகுதியில் தினமும் பாடசாலைக்கு சென்று வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

தனது வீட்டில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரம்வரை நடந்து சென்று மீண்டும் 7 கிலோமீட்டர் தூரம்வரை பேருந்தில் பயணம் செய்து இம்மாணவன் பாடசாலைக்கு சென்றுள்ளான்.

கடந்த 2015ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆண்டு வரை ஐந்து வருடங்கள் தொடர்சியாக பாடசாலைக்கு சென்று சாதனை செய்தமைக்காக இன்று (29.11) இம் மாணவன் பாடசாலை சமூகத்தால் கௌரவிக்கப்பட்டார்.

தந்தை ஊடகவியலாளராகவும், தாயார் தனியார் வைத்தியசாலையில் பணியாற்றி வரும் நிலையில் வறுமை நிலையிலும் தனது கல்வியை ஆர்வத்துடன் முன்னெடுத்த இம் மாணவன் சுகவீனமென்ற போதிலும் தனது பாடசாலைக்கு அருகில் உள்ள அரச வைத்தியசாலையில் மருந்து பெற்றபின்னர் பாடசாலைக்கு சென்று வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் குறித்த பாடசாலையின் அதிபர் கருத்து தெரிவிக்கையில், இவ்வாறான சாதனை படைத்த மாணவனை நான் எனது சேவைக்காலத்தில் காணவில்லை. ஒரு நாள் கூட பாடசாலைக்கு வராமல் விடவில்லை. 100 வீத வரவுள்ள மாணவன்.

இம் மாணவனை நினைத்து நான் மகிழ்வடைவதுடன் பாடசாலை சமூகமும் சந்தோசமடைகின்றனர். இவ்வாறான முன்மாதிரியான மாணவன் எமது மாவட்டத்திற்கு கிடைத்தமை எமது மண்ணுக்கும் பெருமையாகும் என தெரிவித்தார்.