உலக நாடுகளில் பேணிப் பாதுகாக்கப்படும் தமிழர் பண்பாடு! சுந்தரம் அருமைநாயகம் பெருமிதம்

Report Print Yathu in சமூகம்

தமிழர் தம்பண்பாடுகள் உலக நாடுகளிலும் உரிய முறையில் பேணி பாதுகாக்கப்படுகின்றது என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரதேச கலாச்சார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த பண்பாட்டு பெருவிழா இன்று பிற்பகல் 2.30 மணிக்கு கிளிநொச்சி முரசுமோட்டை முருகானந்த கல்லூரி மண்டபத்தில் அமைக்கப்பட்ட அமரர் கோபாலப்பிள்ளை நாகேஸ்வரன் ஞாபகார்த்த அரங்கில் கண்டாவளைப்பிரதேச செயலாளர் ரி.பிருந்தாகரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய மாவட்ட அரச அதிபர்,

தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் வெளிநாடுகளில் தமிழர் கலைகலாசாரம் பண்பாடு என்பன உரியவாறு பாதுகாக்கப்படுகின்றது. அது போல் தமிழர் பண்பாடு கலை கலாசாரம் என்பன கிராமங்களிலும் மாவட்டத்திலும் இலங்கையிலும் பேணி பாதுகாக்கப்படவேண்டும் எனக்குறிப்பிட்டுள்ளார்.

நிகழ்வில் முன்னதாக முதன்மை விருந்திராக சிறப்பு விருந்தினர்கள் முரசுமோட்டை பிரதான வீதியிலிருந்து பாரம்பரிய கிராமிய கலை நிகழ்வுகள் மற்றும் குதிரையாட்டம் பொம்மல் ஆட்டம் என்பவற்றுடன் பிரதான விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு அரங்க நிகழ்வுகள் நடைபெற்றன.

நிகழ்வில் சமய சமூக கல்வி கலைப்பணிகளில் சிறந்த சேவையாற்றிய கல்விப் பணிக்காக வீரகத்தி இராஜகுலசிங்கம் சமூகப் பணிக்காக இராசதுரை சண்முகநாதன் சமயப் பணிக்காக அப்பாக்குட்டி ஐயம்பிள்ளை கலைப்பணிக்காக றெபேட்நிக்சன் யோகநாதன் தர்சன் ஆகியோர் 2019ம் ஆண்டுக்கான கலைஒளி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், வளையோசை நாதம் 09 இதழ் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து காத்தவராயன் சிந்து நடைக்கூத்து மற்றும்சமுக நாடகம் உள்ளிட்ட கலை கலாசார நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன. இதில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பிரதேச மக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.