பரீட்சையில் பார்த்து எழுத அனுமதிக்காத ஆசிரியர்கள் மீது மாணவர்கள் தாக்குதல்! சம்மாந்துறையில் சம்பவம்

Report Print Murali Murali in சமூகம்

பரீட்சையின் போது பார்த்து எழுத அனுமதிக்காத ஆசிரியர்கள், மீது மாணவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியில் இந்தச் சம்பவம் நேற்று நடைபெற்றுள்ளது.

குறித்த கல்லூரி மாணவர்களுக்கான இறுதி பரீட்சை கடந்த 25ம் திகதி முதல் இடம்பெற்று வருகின்றது. 218 மாணவர்கள் தமது பிரிவுகளுக்கான பரீட்சை எழுதும் நிலையில், 12 பரீட்சை கண்காணிப்பாளர்கள் கடமைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், இன்று காலை பரீட்சைகள் ஆரம்பமாவதற்கு முன்னதாக, சில மாணவர்கள் மறைத்து வைத்திருந்த சிறுகுறிப்பு துண்டுகளை பரீட்சை மேற்பார்வையாளர்கள் கைப்பற்றியிருந்தனர்.

எனினும், பரீட்சை நடந்து கொண்டிருந்தபோது மாணவர் ஒருவர் மறைத்து வைத்திருந்த காகிதத் துண்டுகளை வைத்துக் கொண்டு, கேள்விகளுக்கான பதில்களை எழுதிக் கொண்டிருந்தாக தாக்குதலுக்கு இலக்கான பரீட்சை மேற்பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையிலேயே, குறித்த அந்த மாணவர் முறைகேடு செய்வதைக் கண்டுபிடித்ததாகவும் பரீட்சை மேற்பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனையடுத்து, குறித்த மாணவரை தொடர்ந்தும் பரீட்சை எழுத மேற்பார்வையாளர்கள் அனுமதிக்கவில்லை.

அந்த மாணவரை மண்டபத்திலிருந்து வெளியேற்றினர். இதனையடுத்து, மதியம் 12.00 மணியளவில் குறித்த மாணவருடன் வந்த குழுவினர் தாக்குதல் நடத்தியதாகவும் பாதிக்கப்பட்ட பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவரும், உதவி மேற்பார்வையாளர் இருவரும் காயமடைந்த நிலையில், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.