சம்மாந்துறையில் மேற்பார்வையாளர்கள் மீது தாக்குதல் நடத்திய மாணவர்கள் கைது

Report Print Varunan in சமூகம்

சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரியில் பரீட்சை மேற்பார்வையாளர் குழுவினர் மீது தாக்குதல் நடத்திய மாணவர்கள் இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரிக்கு தொழிநுட்ப கல்வி திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய விசேட கடமைக்கு வந்திருந்த பரீட்சை மேற்பார்வையாளர் குழுவினர் மீது பரீட்சார்த்தி மாணவர்கள் சிலர் நேற்று மதியம் சரமாரியாக தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றார்கள்.

கல்லூரியின் கல்வியாண்டு 2019இற்கு உரிய மட்டம் - 05, 06ஐ சேர்ந்த விவசாய டிப்ளோமா மாணவர்களுக்கு இறுதி தவணை பரீட்சைகள் இடம்பெற்று வருகின்றன. இதன்போது மாணவர்கள் பரீட்சையில் பார்த்து எழுதுவதற்கு முயன்றுள்ளனர்.

இதற்கு குறித்த மேற்பார்வையாளர்கள் அனுமதிக்காததினால் குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பலத்த காயங்களுக்குள்ளான மேற்பார்வையாளர், உதவி மேற்பார்வையாளர்கள் இருவர் சிகிச்சைகளுக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் காரணமாக கல்லூரியில் பதற்றமும், பாதுகாப்பற்ற சூழலும் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் சம்மாந்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் சம்மாந்துறை பொலிஸார் வைத்தியசாலைக்கு சென்று குறித்த விரிவுரையாளர்களிடம் வாக்குமூலங்களை பதிவு செய்தனர்.

பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் மேற்பார்வை கடமையில் ஈடுபட முடியாது இருப்பதாக தொழிநுட்ப கல்வி திணைக்களத்துக்கு மேற்பார்வையாளர் குழு தெரியப்படுத்தி உள்ளது.

நேற்று முன்தினம் இது போன்ற கைகலப்பு குறித்த தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் இது தொடர்பாக சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரி நிர்வாகம் எந்தவித முறைப்பாட்டையும் மேற்கொண்டிருக்கவில்லை என்றும் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தால் இந்த தாக்குதல் சம்பவம் நடைபெறாமல் தடுத்திருக்கலாம் என்றும் இந்த தாக்குதலுக்கு ஒரு விதத்தில் கல்லூரி நிர்வாகம் பொறுப்பு கூறவேண்டும் என்றும் சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களிடம் சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்மாந்துறை - மாளிகைக்காடு, காத்தான்குடி மற்றும் திருகோணமலை பிரதேசங்களைச் சேர்ந்த மேற்பார்வையாளர்கள் மீதே குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.