யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கான தேர்தலுக்காக மதிப்பீட்டு குழு நியமனம்

Report Print Banu in சமூகம்

யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கான தேர்தல் முன்னாயத்தப் பணிகளை மேற்கொள்வதற்காக மூவரடங்கிய மதிப்பீட்டு குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழக பேரவை இன்றைய தினம் ஒன்று கூடி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளவர்களின் தகுதி, தரங்களை மதிப்பிடுவதற்கும், தேர்தல் தினத்தை தீர்மானிப்பதற்குமான குழுவைத் தெரிவு செய்துள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் க.கந்தசாமி தலைமையில் நடைபெற்ற விசேட பேரவைக் கூட்டத்தில் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்களை மதிப்பீடு செய்து தேர்தலை நடத்துவதற்கு வசதியான திகதியை பேரவைக்கு அறிவிப்பதற்காக குறித்த மதிப்பீட்டு குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இம் மதிப்பீட்டு குழுவில் யாழ். பல்கலைக்கழக பௌதிகவியல் துறைப் பேராசிரியர் பு.ரவிராஜன், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியர் சி.சிவலோகநாதன், மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் ஜஃபர் சாதிக் ஆகிய மூவர் இம் மதிப்பீட்டுக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

நியமிக்கப்பட்ட இக்குழுவின் மதிப்பீட்டு அறிக்கை கிடைத்ததும், குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தேர்தல் திகதி பல்கலைக்கழக பேரவையினால் தீர்மானிக்கப்படும். தேர்தல் தினத்தன்று தேர்தலைக் கண்காணிப்பதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்படும் ஒருவர் பார்வையாளராகக் கலந்து கொள்ளவுள்ளார்.

எதிர்வரும் மூன்று மாத காலப்பகுதிக்குள் இயலுமான அளவில் விரைவாக துணைவேந்தர் பதவிக்கான தேர்தலை நடத்துவதென இக் கூட்டத்தில் முடிவு செய்யபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவைக்கு புதிதாக நியமனம் செய்யப்பட்டு, தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கமைய இதுவரை காலமும் பேரவைக் கூட்டங்களில் கலந்து கொள்ளாத புதிய உறுப்பினர் சிவராம் இன்றைய பேரவை கூட்டத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.