வீதியை புனரமைக்க கோரி கல்லடி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு - கல்லடி, உப்போடை வீதியை புனரமைத்து தருமாறு கோரி அப்பிரதேச மக்கள் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

கல்லடி, உப்போடை இசைநடனக்கல்லூரி வீதியில் வசிக்கும் பொதுமக்களே இன்று பகல் இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பலத்த மழைபெய்துவருவதன் காரணமாக நீண்டகாலமாக புனரமைக்கப்படாத நிலையில் உள்ள குறித்த வீதி தற்போது முற்றாக நீரில் மூழ்கியுள்ளதுடன் பயணிக்கமுடியாத நிலையில் உள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீதியால் செல்லும் மாணவர்கள் பாதணிகளை கழற்றியே பயணிப்பதாகவும் தினம் அலுவலகம் செல்வோரும் பாடசாலை செல்லும் மாணவர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வரே மிக முக்கியத்துவம் மிக்க இந்த பாதை உமது கண்ணுக்கு தெரியவில்லையா, பள்ளமும் குழியுமாகவுள்ள எமது பாதையை புனரமைத்து தாருங்கள் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளையும் போராட்டத்தில் கலந்திருந்தவர்கள் ஏந்தியிருந்தனர்.

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் குறித்த வீதியை புனரமைத்து நீண்டகாலமாக உள்ள பிரச்சினைக்கு தீர்வினை வழங்கவேண்டும் எனவும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.