விடுதலை புலி உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்பட்ட இரண்டு கைதிகள் சாதாரண தரப் பரீட்சைக்கு!

Report Print Varun in சமூகம்

நாளை ஆரம்பமாகும் கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு இம்முறையும் 20 சிறைக்கைதிகள் தோற்றவுள்ளார் என சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இலங்கை சிறைச்சாலைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் டீ.எம்.ஜே.டப்லியூ .தென்னகோன் இது குறித்து எமது செய்தி சேவைக்கு கருத்து தெரிவித்தார்.

இந்த சிறை கைதிகளுக்காக இரண்டு பரீட்சை நிலையங்கள் கொழும்பு மகசின் சிறைச்சாலையிலும் பாதுக்க - வட்டரக்க சிறைச்சாலையிலும் நிறுவப்பட்டுள்ளன.

பாதுக்க - வட்டரக்க சிறைச்சாலையில் 13 சிறைக்கைதிகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளதுடன் 7 சிறைக்கைதிகள் கொழும்பு மகசின் சிறைச்சாலையில் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

இவர்களுள் இருவர் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ளவர்கள் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் 40 வயதுடைய சிறைக்கைதி ஒருவரும் இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் பாதிக்கப்படுவார்கள் ஆயின் மாற்று நடவடிக்கைகளுக்காக உடனடியாக 117 அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அனைத்து பரீட்சார்த்திகளையும் கேட்டுக்கொண்டுள்ளது.