டெங்கு நுளம்பை கட்டுப்படுத்த மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு வேலைத்திட்டங்கள்

Report Print Rusath in சமூகம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தாய்நாட்டை அழகாக மாற்றுவோம் எனும் வேலைத்திட்டத்தின் கீழ் களுவாஞ்சிகுடி நகரில் களுவாஞ்சிகுடிப் பொலிஸாரின் ஏற்பாட்டில் மாபெரும் சிரமதானப்பணி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது களுவாஞ்சிகுடி பொலிஸார், முச்சக்கரவண்டி சங்கத்தினர், வர்த்தகசங்கம், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை, களுவாஞ்சிகுடி பிரதேச பொது சுகாதார பிரிவினர். விளையாட்டுக்கழகத்தினர் மற்றும் சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்த சிரமதானத்தை முன்னெடுத்திருந்தனர்.

இச்சிரமதானப் பணியின்போது நுளம்பு பெருகும் இடங்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றைத் துப்பரவு செய்ததுடன், தேங்கிக்கிடந்த கழிவுகள், மற்றும், குப்பை கூழங்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டன.

இச்சிரமதானப் பணியில் களுவாஞ்சிகுடிப் பிரதேச உதவிப் பொலிஸ் அதிகாரிகள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதே வேளை ஏறாவூரில் உயிரியல் ரீதியிலான டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக 8000 கிணறுகளுக்குள் 10000 'கப்பி' மீன்கள் இடும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இது மழைப் பருவ காலம் என்பதால் டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகக் கூடிய இடங்களைத் தெரிவு செய்து அவற்றை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் முன்னெச்சரிக்கையாக இவை விடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.