வவுனியாவில் எயிட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலம்

Report Print Thileepan Thileepan in சமூகம்

உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு எயிட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கும் ஊர்வலமும் வவுனியாவில் இன்று இடம்பெற்றது.

வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி பவானி பசுபதிராஜா தலைமை தாங்கியிருந்தார்.

உலக எயிட்ஸ் தினம் டிசம்பர் மாதம் முதலாம் திகதி சர்வதேச ரீதியாக நினைவு கூரப்படுகிறது. அந்தவகையில் இலங்கையில் இம்முறை “சமூகங்கள் நிலைமையை மாற்றலாம்” என்ற தொனிப்பொருளில் எயிட்ஸ் தினம் அனுஸ்டிக்கப்படுவதுடன் அதனை முன்னிறுத்தி குறித்த விழிப்புணர்வு பேரணி இடம்பெற்றது.

வவுனியா பொது வைத்தியசாலையின் பாலியல் நோய்தடுப்பு பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ் விழிப்புணர்வு ஊர்வலம் வவுனியா பொது வைத்தியசாலையில் ஆரம்பமாகி கண்டி வீதி வழியாக, பசார் வீதியை அடைந்து மீண்டும் வைத்தியசாலையை வந்தடைந்தது.

இதன்போது எயிட்ஸ் நோய் பரவுவதன் முறைகள் மற்றும் அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் தொடர்பாக வவுனியா பொலிஸ் உத்தியோகத்தருக்கும், முச்சக்கரவண்டி உரிமையாளர்கள், பெற்றோர்கள், மற்றும் தாதியர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டிருந்தது. இதன் பின் நகரில் வைத்தியர்கள், பொலீசார், தாதியர்கள், பெற்றோர்கள் மற்றும் முச்சக்கரவண்டிகள் மூலம் விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றும் இடம்பெற்றிருந்தது.

இதேவேளை விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் தாய்சேய் நலன் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியகலாநிதி ஜெயதரன், பாலியல் நோய் சிகிச்சை நிலைய பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியகலாநிதி கே.சந்திரகுமார், பாலியல் நோய் சிகிச்சை நிலைய பொது சுகாதார பரிசோதகர் து. சிவானந்தன் மற்றும் முற்சக்கரவண்டி உரிமையாளர்கள், பொலீசார், சாரதிகள், தாதியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.