அதாவுல்லா,தொண்டமானுக்கு எதிராக ஹட்டனில் கண்டன போராட்டம்

Report Print Gokulan Gokulan in சமூகம்

மலையக மக்களை விமர்சித்த அதாவுல்லா மற்றும் செந்தில் தொண்டமானுக்கு எதிராக ஹட்டன் மல்லியப்பு சந்தியில் இன்று கண்டன போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மலையக படித்த இளைஞர்களை அவமானப்படுத்தும் வகையிலும் மலையக மக்களை இழிவுபடுத்தும் வகையிலும் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா மற்றும் முன்னாள் ஊவா மாகாண கல்வி அமைச்சர் செந்தில் தொண்டமான் ஆகியோர் ஊடகங்கள் ஊடாக கருத்து தெரிவித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து 'பிடிதளராதே' எனும் தொனிப்பொருளில் இந்த கண்டன போராட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மலையகத்தில் கல்வி கற்ற ஆசிரியர்கள் , பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்துறை சார்ந்த கற்றவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இது குறித்து போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞரொருவர் கருத்து தெரிவிக்கையில்,

செந்தில் தொண்டமான், அதாவுல்லா அவர்களும் மலையக மக்கள் அவமானப்படும் வகையில் பேசிவிட்டு ஊடகங்கள் ஊடாக வருத்தம் தெரிவித்துள்ளனர். ஆனால் அது எமக்கு அவசியமில்லை. நாங்களும் அவர்களை தகாத முறையில் பேசிவிட்டு மன்னித்துக்கொள்ளுங்கள் என்று சரளமாக கேட்டுவிடலாம்.

ஆகவே அது எமக்கு அவசியமில்லை அவர்கள் செய்த தவறினை உணர்ந்து பொது இடத்தில் மக்கள் மத்தியில் மன்னிப்பு கோரவேண்டும். இல்லாவிட்டால் அவர்களுக்கு எதிராக மலையகத்தில் அரசியல் ரீதியாக கட்சியாக ஒன்று திரண்டு செயற்படுவோம் என்பதனை இந்த இடத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

இளைஞர்கள் அனைவரும் ஒன்று திரண்டு மலையக சமூகத்தினை தரக்குறைவாக பேசியதற்காக ஒன்று திரண்டிருக்கிறோம். இதனை மக்களும் அறிந்து கொள்ள வேண்டும். இந்த போராட்டம் எங்கிருந்தது ஏன் வந்தது என்று அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்று இங்கு வந்தவர்கள், அனைவரும் கல்வி கற்று ஒரு நிலையினை அடைந்தவர்கள. இந்நிலையில் இந்த சமூகத்தை இழிவுபடுத்தியதும் நீங்கள் தான்.

இழிவுக்குட்படுத்தியவர்களும் நீங்கள் தான் என்பதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்நேரத்தில் ஒரு விடயத்தினை நான் செந்தில் தொண்டமானிடம் கேட்க விரும்புகிறேன்.

தொடர்ச்சியாக 80 வருடங்களாக தொழிற்சங்க வரலாறு, அரசியல் வரலாறு கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மலையக மக்களின் கல்வி வளர்ச்சிக்காக என்ன செய்துள்ளது என்ற கேள்வியினை தொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இவர்கள் இருவரும் பொது மன்னிப்பு கோர வேண்டும் , என தெரிவித்துள்ளனர்.