சீரற்ற காலநிலைக் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு

Report Print Gokulan Gokulan in சமூகம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக நந்திக்கடல் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது.

இதனால் நந்திக்கடலினை அண்டியதாகக் காணப்படும் வயல் நிலங்கள் நீரில் மூழ்கிக் காணப்படுகின்றன.

அதேவேளை வட்டுவாகல் பாலத்திற்கு மேல் நந்திக்கடலின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதனால், வட்டுவாகல் பாலத்தினால் போக்குவரத்தில் ஈடுபடுபவர்கள் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

நந்திக்கடலுக்கும், பெருங்கடலுக்கும் இடையில் காணப்படுகின்ற மணல் திடலை வெட்டி அகற்றி, நந்திக்கடல் நீரை பெருங்கடலுடன் இணைக்காதுவிடில், வட்டுவாகல் பாலத்தினால் செல்பவர்களின் போக்குவரத்து முற்றாகத் தடைப்படுவதுடன், மேலும் பல ஏக்கர் வயல் நிலங்களும் நீரில் மூழ்கும் அபாய நிலை காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சி

கிளிநொச்சி மாவட்டத்தில் தொடரும் மழைக் காரணமாக இரணைமடு குளம் உள்ளிட்ட குளங்களின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதுடன், வன்னேரிக்குளம் பிரமந்தனாறுக்குளம் குடமுருட்டி குளம் ஆகிய மூன்று குளங்கள் வான் பாய்வதுடன் ஏனைய குளங்களில் நிரம்பியுள்ளன.

அம்பாறை

அம்பாறை மாவட்டத்தில் இருவார காலத்திற்கு மேலாக பெய்து வரும் அடைமழை காரணமாக கிட்டங்கி வாவியூடாக ஊடறுத்து செல்லும் பிரதான வீதி வெள்ள நீரால் மூழ்கி உள்ளமை காரணமாக பொதுமக்கள் போக்குவரத்து செய்வதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

கல்முனை பிரதேசத்தையும் நாவிதன்வெளி பிரதேசத்தையும் இணைக்கும் கிட்டங்கி வாவியூடாக செல்லும் குறித்த பிரதான பாதையில் வெள்ள நீர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வடிந்தோட தொடங்கியுள்ளது.

இங்கு தற்போது அதிகளவான ஆற்றுவாழைகளும் வெள்ள நீருடன் அடித்து செல்லப்படுவதால் அப்பகுதியில் போக்குவரத்து செய்வதில் சிரமங்களை பொதுமக்கள் எதிர்கொண்டுள்ளனர்.

அத்துடன் அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் வயல்கள் நிலங்கள் மழை வெள்ளத்தால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் மாவட்டதிலுள்ள சிறு குளங்கள் நிரம்பி அருகில் உள்ள தாழ் நிலங்கள் நீரில் மூழ்கி வருகின்றன.

இப்பகுதியில் உள்ள சில குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையினால் வீதியை ஊடறுத்து பாயும் வெள்ள நீர் மேலும் அதிகரித்து செல்கின்றதை காண முடிகிறது.