திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு நோயாளர்களை அனுமதிக்கச் செல்லும் வீதியில் அசுத்தமான நீர் தேங்கி நிற்பதால் நோயாளர்களும், பொதுமக்களும் அவதியுற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறித்த வீதி குன்றும் குழியுமாக உள்ளதுடன் அசுத்தமான நீர் தேங்கி நிற்பதால் வாகனங்கள் அதாவது முச்சக்கரவண்டி மற்றும் நோயாளர்காவு வண்டி போன்றவை பயணிக்க முடியாத நிலையில் உள்ளதாகவும் தெரிய வருகின்றது.
தற்பொழுது திருகோணமலை மாவட்டத்தில் டெங்கு நோய் அதிகரித்து காணப்படுவதனால் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வரும் பொதுமக்கள் மற்றும் நோயாளர்கள் இன்னும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் குற்றம் சுமத்துகின்றனர்.
அசுத்தமான நீர் தேங்கி நிற்பதை பொது வைத்தியசாலையின் நிர்வாகம் கண்டும் காணாதது போல் தமது கடமைகளை செய்து வருவதாகவும், பொதுமக்கள் நலன் கருதி எதுவித முன்னேற்றமும் வைத்தியசாலை தரப்பினர் செய்வதில்லை எனவும் பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அத்துடன் வைத்தியசாலையில் கட்டில்கள் குறைவாக காணப்படுவதாகவும் ஒரு கட்டிலில் இரண்டு நோயாளர்களை அமர்த்துவதினால் இன்னும் நோய் தீவிரம் அடைவதாகவும் நோயாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.