3 கோடி ரூபா பெறுமதியான தங்க ஆபரணக் கொள்ளை: விமானப்படைச் சிப்பாய் உட்பட இருவர் கைது

Report Print Kamel Kamel in சமூகம்

மூன்று கோடியே பதினெட்டு லட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களைக் கொள்ளையிட்டுச் சென்ற சம்பவமொன்றுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் விமானப்படைச் சிப்பாய் உள்ளிட்ட இரண்டு பேரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

பொலிஸ் சீருடையில் தோன்றி ஆயுத முனையில் வத்தளை பிரதேச வர்த்தகர் ஒருவரிடமிருந்து இந்த ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

கடந்த மாதம் 15ம் திகதி இந்த ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் இன்றைய தினம் மினுவன்கொட பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்களின் ஒரு தொகுதியையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

கொள்ளையிடுவதற்கான பயன்படுத்திய வாகனம், இரண்டு போலி வாகன இலக்கத் தகடு மற்றும் செல்லிடப்பேசி என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களை கைது செய்யவும், கொள்ளையிடப்பட்ட மிகுதி ஆபணரங்களையும் மீட்கவும் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தங்க ஆபரண கடை உரிமையாளர் கடையை மூடி விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, பொலிஸ் சீருடைக்கு நிகரான சீருடை தரித்த நபர்கள் ஆயுத முனையில் கடத்தி அதன் பின்னர், ஆபரணங்களை கொள்ளையிட்டுள்ளனர்.

கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினைச் சேர்ந்தவர்கள் என அடையாளப்படுத்திக் கொண்ட நான்கு ஆயுததாரிகளே இந்த கொள்ளையை மேற்கொண்டதாக வர்த்தகர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.