நாட்டில் கோதுமை மா மற்றும் பால் மா ஆகியனவற்றை இறக்குமதி செய்வதற்காக செலவிடப்படும் தொகைக்கு நிகரான தொகையே கல்விக்காகவும் செலவிடப்படுகின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
மக்களை நோயாளிகளாக்கும் கோதுமை மா மற்றும் பால் மா என்பனவற்றை இறக்குமதி செய்வதற்காக வருடமொன்றுக்கு நூறு பில்லியன் ரூபா செலவிடப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த தொகையானது இலங்கையில் வருடமொன்றுக்கு கல்விக்காக செலவிடப்படும் தொகைக்கு நிகரானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
1960ம் ஆண்டில் 300 மெற்றிக் தொன் எடையுடைய கோதுமை மா இறக்குமதி செய்யப்பட்டதாகவும் தற்பொழுது அந்த தொகை பன்னிரெண்டு மடங்காக உயர்வடைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கோதுமை மா இறக்குமதிக்காக வருடமொன்றுக்கு 40 பில்லியன் ரூபாவும், பால் மா இறக்குமதிக்காக வருடமொன்றுக்கு 60 பில்லியன் ரூபாவும் செலவிடப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதாரம், சுகாதாரம், சுற்றாடல் என்பனவற்றை கட்டியெழுப்புவதற்கு சிறந்த நோக்கு அவசியம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.