சுவிஸ் தூதரக பெண் பணியாளர் கடத்தப்பட்ட விவகாரம்! முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டம் நிறைவு

Report Print Murali Murali in சமூகம்

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்திற்கு முன்னால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அஜித் பிரசன்ன தனது போராட்டத்தை கைவிட்டுள்ளார்.

வணக்கத்துக்குரிய அதுரலியே ரதன தேரர் மற்றும் ஓய்வு பெற்ற ரியர் அத்மிரல் சரத் வீரசேகரவின் கோரிக்கைக்கு அமைய அவர் தனது போராட்டத்தை கைவிட்டுள்ளார்.

குற்றவியல் புலனாய்வு திணைக்களத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த டி சில்வா, பாதுகாப்புக் கருதி அண்மையில் தனது குடும்பத்துடன் சுவிட்ஸர்லாந்து புறப்பட்டுச் சென்றார்.

நிஷாந்த டி சில்வா, கடந்த காலத்தில் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை, பிரகீத் ஹெக்னேலிகொட காணாமல் போனமை, 11 இளைஞர்களை கடத்தி கொலை செய்தமை, வசீம் தாஜூடீன் கொலை உட்பட பல முக்கிய சம்பவங்கள் குறித்து விசாரணைகளை நடத்திய பொலிஸ் அதிகாரிகளில் ஒருவராவார்.

நிஷாந்த டி சில்வா, தப்பிச்சென்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே, குறித்த சுவிஸ் தூதரக பெண் பணியாளர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டதாக சுவிட்ஸர்லாந்தின் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்திற்கு சுவிஸ் அரசாங்கம் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. அத்துடன், முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியுள்ளது.

இந்நிலையில், வெள்ளை வானில் கடத்தப்பட்ட சர்ச்சைக்குரிய சம்பவம் தொடர்பில் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் பணியாளர் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டுமென வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று நடத்தப்பட்டது.

தாய்நாட்டிற்கான இராணுவத்தினர் என்கிற அமைப்பின் இணைப்பானரான மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் மேஜர் அஜித் பிரசன்ன இந்த ஆர்ப்பாட்டத்தை கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகத்திற்கு முன்பாக முன்னெடுத்திருந்தார்.

இந்நிலையிலேயே, அதுரலியே ரதன தேரர் மற்றும் ஓய்வு பெற்ற ரியர் அத்மிரல் சரத் வீரசேகரவின் கோரிக்கைக்கு அமைய ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அஜித் பிரசன்ன தனது போராட்டத்தை கைவிட்டுள்ளார்.