குருநகர் கடற்கரையை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுப்பு

Report Print Sumi in சமூகம்

யாழ்.குருநகர் கடற்கரையை அண்டிய பகுதிகளை சுத்தம் செய்யும் பணி இன்று முன்னெடுக்கப்பட்டது.

நாடு பூராகவும் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் யாழ்.மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதியின் வழிகாட்டலின் கீழ் யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரை மற்றும் அதனை அண்டிய பகுதிகளை சுத்தம் செய்து , டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் இனம்காணப்பட்டு அழிக்கப்பட்டன.

குறித்த சுத்தம் செய்யும் பணிகளில் கலந்துகொண்ட யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

பொது இடங்களை சுத்தம் செய்து பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மக்களிடமே உள்ளது. எனவே இனிவரும் காலங்களில் மக்கள் குப்பைகளை கடற்கரையோரங்களில் கொட்டாது அதனை உரிய முறையில் அகற்ற முன்வரவேண்டும், என தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அனுசரணையுடன் இடம்பெற்ற குறித்த சுத்தமாக்கும் பணியில் சுமார் 600 ற்கும் மேற்பட்ட இராணுவத்தினர், யாழ் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கிராம சேவையாளர்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு அலுவலர்கள் கலந்து சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.