யாழ்.நகர வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் எம்.ஏ.சுமந்திரன்

Report Print Sumi in சமூகம்

எதிர்வரும் காலத்தில் யாழ்ப்பாண மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் பண்டிகைக் காலத்தின் போது நடைபாதை வியாபாரத்தை தடை செய்வதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.வணிகர் கழக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மாநகரசபை முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

இதன்போது யாழ்.நகர வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தெரிவிக்கப்பட்டதுடன், யாழ்ப்பாண மாநகர சபைக்கும் வர்த்தக சங்கத்திற்கும் இடையே காணப்படும் முரண்பாடு நிலைமைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

நீண்டகாலமாக யாழ்ப்பாண மாநகர சபைக்கு சொந்தமான நவீன சந்தை அங்காடியில் உள்ள கடைஉரிமையாளர்களின் பெயர் மாற்றம் தொடர்பாக அனைவராலும் பேசப்பட்டு வரும் நிலையிலும் இன்று வரை அதற்கு ஒரு முடிவு எடுக்கப்படவில்லை என்ற விடயம் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

இதற்கு பதிலளித்த எம்.ஏ.சுமந்திரன், இது தொடர்பில் மாநகர முதல்வரினால் குறித்த திட்டமானது முன்னெடுக்கப்பட்டுள்ளது. எனினும் அது ஆளுநரின் கையொப்பம் அதற்காக கிடப்பில் காணப்படுகின்றது. எனவே புதிய ஆளுநர் வருகை தந்தவுடன் அதற்குரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

அத்துடன் பண்டிகை காலங்களில் நடைபாதை வியாபாரத்தை நிறுத்துமாறும் தமக்கு அது பல நஷ்டங்களை ஏற்படுவதாகவும் வர்த்தகர்களினால் தெரிவிக்கப்பட்டது.

இந்த விடயம் தொடர்பான பிரேரணை ஒன்றினை மாநகரசபையில் முதல்வர் தான் கொண்டு வர உள்ளதாகவும் அந்த பிரேரணை நிறைவேற்றப்பட்ட பின்னர் எதிர்வரும் பண்டிகை காலங்களில் நடைபாதை வியாபாரத்திற்கு தடை ஏற்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குறித்த சந்திப்பு தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர்களினால் கடுமையாக எச்சரிக்கப்பட்டனர்.

Latest Offers