காரைதீவில் 654 குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிப்பு

Report Print Varunan in சமூகம்

அம்பாறை மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழை காரணமாக காரைதீவுக் கிராமம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பல வீடுகள் மற்றும் வீதிகள் எல்லாம் வெள்ளக்காடாக காட்சியளிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய தினம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரிவுகளுக்கு காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் நேரடியாக விஜயம் செய்து பார்வையிட்டதோடு, வெள்ளம் வடிந்தோடும் வண்ணம் தமது ஊழியர்களை கொண்டு பல வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறார்.

அத்துடன் மேலதிகமான வெள்ளத்தை கடலுக்குள் வெட்டிவிடப்பட்டதையும் அவதானித்தார்.

காரைதீவுக் கிராமத்தில் மட்டும் 654 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 28 குடும்பங்கள் இடம்பெயர்ந்து உறவினர்களின் வீடுகளில் தஞ்சமடைந்திருப்பதாகவும் அவர்களுக்கான உணவுக்கு ஏற்பாடு செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி.ஜெயசிறில் கருத்து தெரிவிக்கையில்,

காரைதீவு கிராமத்தில் 11ஆம், 12ஆம், வட்டாரத்தில் சுமார் 650இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிலர் இடம்பெயர்ந்து உறவினர் வீடுகளில் தங்கிருக்கின்றனர். இன்னும் சில தினங்களுக்கு மழை தொடருமானால் அனைத்து மக்களும் இடம்பெயர்ந்து பொதுஇடங்களில் தங்க வைக்க வேண்டிய சூழல் ஏற்படும். மழை வெள்ளம் காரணமாக பல மலசல கூடங்கள் நிரம்பி வெள்ள நீருடன் கலப்பதால் தொற்று நோய்கள் பரவும் அபாயமுள்ளது.

இது தொடர்பாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணனுக்கு கடிதம் மூலம் அறியப்படுதியுள்ளதோடு, கல்முனை மாநகர சபையை மேலதிக உதவிகளுக்கு அழைக்கவுள்ளதாக தெரிவித்தார்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் கருத்து தெரிவிக்கையில்,

தங்களுடைய வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலைமை காணப்படுவதாகவும், நோய்வாய்பட்டவர்களும் வீட்டிலே முடங்கியுள்ளனர்.

இவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லமுடியாதுள்ளது. மூன்று அடிக்கு மேலான வெள்ள நீரிலே நோயாளிகளை சுமந்து செல்ல வேண்டியுள்ளது.

வருடா வருடம் இதே நிலைதான் மழை காலங்களில் காணப்படுவதாகவும் தங்களுடைய பிள்ளைகள் பாடசாலை மற்றும் பரீட்சைக்கு செல்வதானாலும் நனைந்தபடியே செல்ல வேண்டிய சூழலில் இருக்கின்றோம். உரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் விசனம் தெரிவித்தனர்.