எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு நிந்தவூரில் மாபெரும் நடைபவனி

Report Print Varunan in சமூகம்
16Shares

உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு எயிட்ஸ் நோய் சம்பந்தமான நடைபவனி மற்றும் விழிப்பூட்டல் கருத்தரங்கு என்பன நடைபெற்றுள்ளன.

அம்பாறை - நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் இருந்து இன்று ஆரம்பமாகிய நடைபவனி நிந்தவூர் பிரதான வீதியூடாக சென்று, பொதுச்சந்தை வழியாக நிந்தவூர் தொழில்பயிற்சி நிலையத்தை சென்றடைந்தது.

தொடர்ந்தும் நிந்தவூர் தொழில்பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற கருத்தரங்கின் போது கருத்து தெரிவித்த கல்முனை பிராந்திய பாலுறவு நோய்கள் தடுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எச்.பீ.என்.ஜீவனி,

எச்.ஐ.வி என்பது நாள்பட்ட தொற்று. அது ஒரு நோய் அல்ல. 2030ஆம் ஆண்டளவில் எச்.ஐ.வி. அற்ற ஒரு நாடாக இலங்கையை மாற்றுவதே எமது இலக்கு.

இதற்கு அனைவரினதும் பங்களிப்பு மிக உன்னதமானது. தற்போது தாயிலிருந்து குழந்தைக்கு கடத்தப்படும் எச்.ஐ.வி சிபிலிசு என்னும் தொற்று முற்றாக தடுக்கப்பட்டுள்ளது என்று உலக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.

3500 குறைவான எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளானவர்களே தற்போது உள்ளனர். இது சுகாதார துறைக்கு கிடைத்த வெற்றி.

2025ஆம் ஆண்டிற்குள் முழுமையாக கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சுகாதார திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.

இந்த தொற்றுக்கு ஆளானவர்கள் தொடர்ச்சியாக மருந்துகளை எடுத்துக்கொண்டால் ஏனைய தொற்றுக்கள் போன்றே கட்டுப்படுத்தலாம்.

முறையான உடலுறவு, பாலியல் கல்வி, சமூகங்களின் செயற்பாடும் இன்றியமையாதது. வாழ்நாளில் ஒருமுறையாவது அனைவரும் தங்களை பரிசோதித்து தங்களை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் கல்முனை பதில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எம்.சீ.எம். மாஹிர், கல்முனை பிராந்திய பாலுறவு நோய்கள் தடுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எச்.பீ.என்.ஜீவனி, சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்லிமா பஸீர், நிந்தவூர் பிரதேச செயலாளர் டீ.எம். அன்ஸார், நிந்தவூர் அனைத்து பள்ளிவாசல் சம்மேளன தலைவர் எம்.பீ. பாரூக் இப்றாஹீம், நிந்தவூர் தொலில்பயிற்சி நிலையத்தின் பிரதி பணிப்பாளர் எம்.பீ. நளீம், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், தொலில்பயிற்சி நிலையத்தின் மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.