தொடர் மழை! கிளிநொச்சி கண்டாவளையில் 65 குடும்பங்கள் பாதிப்பு

Report Print Yathu in சமூகம்

தொடர் மழை காரணமாக கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தில் 65 குடும்பங்களை சேர்ந்த 181 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.

கிளிநொச்சி பரந்தன், தர்மபுரம், கட்டைக்காடு, பிரமந்தனாறு ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு வெள்ள அனர்த்தத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.

இவர்களில் 2 குடும்பங்களை சேர்ந்த 8 பேர் கட்டைக்காடு அ.த.க பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், ஏனையோர் உறவினர்கள் வீடுகளில் தங்கி உள்ளதாகவும் குறித்த புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.

தொடர்மழையால் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சிவபுரம் பகுதி மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் உள்ள வீடுகள் சிலவற்றுக்குள் வெள்ள நீர் உட்சென்றுள்ளது.

தொடர்ந்தும் அப்பகுதியல் சில இடங்களில் வெள்ள நீர் தங்கியுள்ளது. அப்பகுதி மக்களில் சில குடும்பங்கள் உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர். அங்கு ஏற்பட்ட வெள்ள காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்ககை பாதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தினால் வீட்டு வளர்ப்பு கோழிகள் சிலவும் அடித்து செல்லப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் கிளிநொச்சி கட்டைக்காடு மக்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரியகுளம் நிறைவு மட்டத்தை அடைந்துள்ளமையால் அதிலிருந்து வெளியேறும் வெள்ள நீர் வீடுகளிற்குள் சென்றுள்ளது. அதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன் வெள்ள நீர் வீடுகளிற்குள் உட்புகுந்த நிலையில் வாழும் குடும்பங்களை சந்தித்தார்.

அங்கு காணப்படும் வெள்ள நீர் வெளியேறும் வரை அவர்களை கட்டைக்காடு அ.த.க. பாடசாலையில் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்ததார்.

அதேவேளை, பாதிக்கப்பட்ட குறித்த இரு குடும்பங்களிற்குமான உணவு, சுகாதாரம் உள்ளிட்ட வசதிகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளையும் கண்டாவளை பிரதேச செயலாளர் மேற்கொண்டுள்ளார்.

அதேவேளை குறித்த பகுதியில் வட்டக்கச்சி செல்லம் பிரதான வீதி ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வீதியை குறுக்கெடுத்து வெள்ள நீர் பாய்வதனால் மக்கள் போக்குவரத்து செய்வதில் பாதிப்புக்களை எதிர்கொள்கின்றனர்.

பிரமந்தனாறு குளம் அடைவு மட்டத்தை அடைந்து மேலதிக நீர் வெளியேறி வருகின்றது. இதன் காரணமாக அப்பகுதயில் உள்ள மக்கள் பயன்பாட்டு வீதி ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் வாழும் 15 குடும்பங்கள் குறித்த பாதிப்பினை எதிர்கொண்டுள்ளனர்.

அப்பகுதியில் காணப்படும் நிலை தொடர்பில் கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன் நேரடியாக சென்று பார்வையிட்டார்.