மட்டக்களப்பில் குளங்களின் வான்கதவுகள் திறப்பு

Report Print Rusath in சமூகம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வருகின்ற கன மழையின் காரணமாக ஏற்படும் வெள்ள நீர் அபாயத்தைக் குறைப்பதற்கு வசதியாக குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டு மித மிஞ்சிய நீர் கடலுக்குள் பாய விடப்படுவதாக மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர் எஸ்.எம்.பி.எம். அஸ்ஹர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பெரிய குளங்களான உன்னிச்சை, நவகிரி, உறுகாமம், கட்டுமுறிவு, வெலிக்காக்கண்டி ஆகிய குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

அதேவேளை மட்டக்களப்பை ஊடறுத்துச் செல்லும் புளுகுணாவை குளத்தின் வான் கதவும் திறந்து விடப்பட்டுள்ளது.

புளுகுணாவைக் குளத்தின் நீர்மட்டம் 29அடிக்கு மேல் உள்ளதனாலும், தொடர்ச்சியாக மழை பெய்துகொண்டிருப்பதினாலும் இந்தக் குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து கால நிலை சீரடையாமல் இருப்பதால் மாவட்ட இடர் முகாமைத்துவ அலுவலர்களும், நீர்ப்பாசனத் திணைக்களம், பிரதேச செயலகங்கள் ஆகியவற்றின் அதிகாரிகளும் கள நிலைமைகளை அவதானித்து செயற்படும் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதேவேளை, கடற்படையினர், விமானப் படையினர், இராணுவத்தினர், விஷேட அதிரடிப்படையினர், பொலிஸார் ஆகியோரும் கண்காணிப்பு தயார் நிலைக் கடமைகளில் ஏற்கெனவே ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.