சுனாமி தொடர்மாடி வீட்டுத்தொகுதியின் கழிவறைக்குழி பெருக்கெடுப்பு!

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

காரைதீவு 3ஆம் பிரிவிலுள்ள சுனாமி மீள்குடியேற்ற மாடிவீட்டுத்தொகுதியின் கழிவறைக்குழிகள் நிரம்பி வெடித்துப் பெருக்கெடுத்துள்ளது.

கடந்த சில நாட்களாக பெய்துவரும் அடை மழையையடுத்து இம்மாடிவீட்டுத்தொகுதிப்பிரதேச கழிவறைக்குழிகள் நிரம்பியிருந்தன. நேற்றையதினம் அவை வெடித்து வெளியேறி பெருக்கெடுத்தன.

இதனையடுத்து அங்கு துர்நாற்றம் வீசியது. மழைகாலமாதலால் மக்கள் பலத்த அசௌகரியத்துக்குள்ளானார்கள். அதனால் அங்குள்ள குடியிருப்பாளர்கள் வெளியேற திட்டமிட்டு காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கே.ஜெயசிறிலிடம் தகவல்கொடுத்தனர்.

இதனையடுத்து கொட்டும்மழையையும் பொருட்படுத்தாது தவிசாளர் ஸ்தலத்திற்கு விரைந்து குடியிருப்பாளர்களுடன் கலந்துரையாடினார்.

இதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அதுவரை தற்காலிகமாக மாடிவீட்டுத்தொகுதியின் மேட்டுநிலப்பக்கம் வசிக்க வசதியளிப்பதாக தவிசாளர் கூறியதையடுத்து மக்கள் அமைதியானார்கள்.

தவிசாளர் ஜெயசிறில் அங்கிருந்தவாறு சுகாதார வைத்திய அதிகாரி பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளோடு தொடர்புகொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கான வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

சுகாதார சீர்கேட்டினால் தொற்றுநோய் பரவும் ஆபத்து இருந்தால் தற்காலிகமாக வேறிடத்தில் அமருமாறும் சமைத்த உணவு வழங்க ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தார்.

இப்பிரச்சினையை மாரிக்கு முன்பே தீர்க்கவேண்டுமென்பதற்காகவே அமைச்சர் மனோகணேசனிடம் சென்று 20 லட்சருபா நிதியை கஸ்ட்ப்பட்டு கொண்டுவந்தேன்.

ஆனால் அதனை நடைமுறைப்படுத்தவேண்டியது பிரதேச செயலகம். எனவே அதனை தன்னிடம் கேளாதீர்கள் என்றார்.

இக்கழிவறைக்குழிகளை மூடி புதிய குழிகள் அமைக்க தவிசாளர் ஏலவே முன்னாள் அமைச்சர் மனோகணேசனிடம் கேட்டுப்பெற்றுக் கொணர்ந்த 20 லட்சருபாவுக்கு என்ன நடந்தது? என்று மக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

ஏலவே 4 மாதங்களுக்கு முன்பு இந்நிதியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பாக மக்களுடன் கலந்துரையாடல் இடம்பெற்று ஊடகங்களில் செய்தி வெளிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி காரைதீவு பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜனிடம் கேட்டபோது அந்நிதியைப் பயன்படுத்த காலஅவகாசம் போதாதாகையால் அதனை திருப்பி அனுப்பப்போவதாகத் தெரிவித்தார்.