ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை அல்லது அவரது குடும்ப உறுப்பினர் ஒருவரை கொலை செய்யவதற்கு சதித்திட்டம் தீட்டியதாக தெரிவித்து கைது செய்யப்பட்ட இளைஞர்களில் நால்வர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
எனினும், பிரதான சந்தேகநபரை 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணை செய்ய மினுவாங்கொடை நீதிவான் கேசர சமரதிவாகர, இன்று மாலை அனுமதி வழங்கியுள்ளார்.
அந்த வகையில், வாழச்சேனை பகுதியைச் சேர்ந்த பிரதான சந்தேக நபரை தொடர்ந்து தடுப்பில் வைத்து விசாரணை செய்ய பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
குறித்த ஐந்து இளைஞர்களும், கடந்த திங்கட்கிழமை சீதுவை - ஜயவர்தனபுர , அமந்தொழுவை பகுதியில் வாடகை வீட்டடில் தங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
வாழச்சேனை, கிளிநொச்சி- அக்கராயன்குளம் , விஷ்வமடு - தர்மபுரம் விஷ்வமடு - கல்லாரு மற்றும் மஸ்கெலியாவைச் சேர்ந்த நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட நபர்களில் மேலதிக விசாரணையின் பின்னர் நால்வர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், பிரதான சந்தேக நபரிடம் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.