அடைமழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 22614 பேர் பாதிப்பு

Report Print Rusath in சமூகம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை தொடர்ச்சியாக பெய்து வருகின்ற அடைமழையினால் 6696 குடும்பங்களைச் சேர்ந்த 22614 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இன்று முதல் 8 இடைத்தங்கல் முகாம்களில் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

அனர்த்த நிலைமைகளை ஆராயும் அவசர கலந்துரையாடல் அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாழேந்திரனுடன் இணைந்து நடாத்தப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடல் மூலமாக மாவட்டத்தில் பல பகுதிகளில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்படுகின்ற மக்களை உடனடியாக அப்புறப்படுத்துவதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளையும், இதற்கு ஏதுவான சம்மந்தப்பட்ட திணைக்களங்கள் மற்றும் இராணுவம் ,கடற்படை,பொலிஸ் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினர் ,பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்கள் போன்றோர் தயார் நிலையில் உள்ளனர்.

கிரான் பாலத்தை ஊடறுத்து வெள்ள நீர் பாய்வதனால் மக்களின் போக்குவரத்துக்காக 5 இயந்திரப்படகுகள் சேவையில் ஈடுபட்டு வருவதுடன், அப்பகுதியிலிருந்து கல்வி பயிலும் பொது சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றும் 2 மாணவர்கள் இவ் இயந்திரப்படகுக்கூடாகவே தங்களின் பயணத்தை மேற்கொண்டு பரீட்சை எழுதி வருவதும் குறிப்பிடத்தக்கது .

மாவட்டத்தின் சகல பிரதேச சபைகளும், மாநகர சபை ,நகர சபை ,ஆகியவை நீர்வடிந்தோடுகின்ற வடிகான்களை கவனமான முறையிலே இக்காலப்பகுதியில் துப்பரவு செய்து நீர் வழிந்தோடுவதற்கு ஏதுவான சுழலை ஏற்படுத்த வேண்டுமென மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாழேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Latest Offers