வவுனியா பொருளாதார மத்திய நிலையம் தொடர்பாக டக்ளஸ் தலைமையில் ஆராய்வு

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் கடற்றொழில் நீரியல்வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் உள்ள அவசிய பிரச்சினைகள் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கான விசேடக் கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

இதில் அமைச்சருடன் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் தர்மபால செனவிரட்ன, மாவட்ட அரச அதிபர் ஐ.எம்.ஹனீபா, மேலதிக அரச அதிபர் தி.திரேஸ்குமார், வடமாகாண போக்குவரத்து அமைச்சின் அதிகாரி திருமதி சரஸ்வதி மேகநாதன், நகரசபை தலைவர் இ.கௌதமன், உப தவிசாளர் சு.குமாரசாமி, வவுனியா வடக்கு, வெண்கல செட்டிகுளம், வவுனியா தெற்கு பிரதேச செயலாளர்கள், வவுனியா உதவிப் பிரதேச செயலாளர், வர்த்தக சங்க பிரதிநிதிகள், மரக்கறி மொத்த வியாபார சங்க பிரதிநிதிகள், விவசாய சம்மேளனப் பிரதிநிதிகள், தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தினர், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, இ.போ.சபை உத்தியோகத்தர்கள், ஈபிடிபி கட்சி அமைப்பாளர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது சுமார் 100 கோடி ரூபாய் செலவில் வவுனியா, மதவுவைத்தகுளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையம் நீண்டகாலமாக திறக்கப்படாமைக்குரிய காரணம் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், அதனை உடனடியாக இயங்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் ஆகியோரால் வலியுறுத்தப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த வவுனியா மரக்கறி மொத்த வியாபாரிகள் சங்க பிரதிநிதி நந்தகுமார்,

பொருளாதார மத்திய நிலையம் அமைந்துள்ள மதவு வைத்தகுளம் பகுதியானது வியாபார நடவடிக்கைகளுக்கு பொருத்தமான இடமல்ல.

தாம் அதிகாலையில் மரக்கறிகளை கொள்வனவு செய்வதற்கு கூட பணத்தை எடுத்துச் செல்வதற்கு அஞ்சும் நிலையே காணப்படுகின்றது எனத் தெரிவித்தார்.

அத்துடன் குறித்த பொருளாதர மத்திய நிலையத்தில் உள்ள கடைகளை பிரித்து வழங்குவதற்கான நேர்முகத்தேர்வுகள் இடம்பெற்றன. அதில் மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான்,

பொருளாதார மத்திய நிலைய விவகாரம் நீண்ட இழுபறியின் பின்னர் அமைச்சரவை அனுமதியுடன் தான் அங்கு அமைக்கப்பட்டது.

இதன்போது நடந்த பிரச்சனைகள் உங்களுக்கு தெரியும். அவ் விடத்தை பொருத்தமில்லை என விட முடியாது. காலப்போக்கில் அது பழக்கத்திற்கு வந்து விடும். அதனை பயன்படுத்த வேண்டும் என்றார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து தெரிவிக்கையில்,

பொருளாதார மத்திய நிலையப் பகுதியில் மொத்த மரக்கறி வியாபாரிகள் சென்று வியாபாராத்தில் ஈடுபடுவதற்குரிய வாடகை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டால் அங்கு சென்று இயங்க முடியுமா என கேள்வி எழுப்பினார். அதற்கு மொத்த வியாபாரிகள் சம்மதம் தெரிவித்தனர்.

இதனையடுத்து பொருளாதார மத்திய நிலையத்தில் சென்று வியாபாரம் மேற்கொள்ள உள்ள பிரச்சனைகள் தொடர்பில் எழுத்து மூலம் வழங்குமாறும், விரைவில் உரிய தீர்வை தாம் பெற்றுத் தருவதாகவும் அமைச்சர் இதன்போது வாக்குறுதியளித்தார்.

இதற்கு சம்மதம் தெரிவித்த மொத்த வியாபார சங்க பிரதிநிதிகள், தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

தாம் நீண்டகலமாக பல்வேறு கஸ்ரங்களுக்கு மத்தியில் இலுப்பையடிப் பகுதியில் உள்ள அரச காணியில் சிறிய கடை அமைத்து மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றோம்.

எமக்கான எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லை. நகர சபையும் செய்து தரவில்லை. ஆனால் நகரசபை எம்மிடம் வாடகை அறவிடுகிறார்கள். ஒரு நாள் செலுத்தாது விட்டால் கூட அழுத்தம் தருகிறார்கள்.

புதிய பொருளாதார மத்திய நிலையமத்திலும் இலுப்பையடியில் உள்ள அனைவருக்கும் கடைகள் வழங்கப்படவில்லை. எனவே இலுப்பயைடியில் எமது மொத்த விற்பனை நிலையம் உள்ள பகுதியை எமக்கே வியாபார நிலையம் அமைக்க அனுமதி வழங்க வேண்டும் எனவும் கோரினார்.

இதன்போது கருத்து தெரிவித்த மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் தர்மபால செனவிரட்ன, அப்பகுதியில் புதிய கடைத்தொகுதி ஒன்று அமைந்து வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்துவதாக தெரிவித்தார்.

இந்நிலையில், மொத்த வியாபாரிகள் தரகு அடிப்படையில் மரக்கறிகளைப் பெற்று விவசாயிகளிடம் இருந்து அதிக பணத்தை இலாபமாக பெறுவதாகவும், விவசாய சம்மேளனத்திற்கும் பொருளாதார மத்திய நிலையப் பகுதியில் இரண்டு கடைகளைப் பெற்றுத்தருமாறு சம்மேளனத்தில் தலைவர் சேதுகாவலர் தெரிவித்தார். இது தொடர்பிலும் கவனம் செலுத்துவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்தார்.

Latest Offers

loading...