நீதிமன்ற வளாகத்தில் கொள்ளையனிடம் பணத்தை பறிகொடுத்த வயோதிப தாய்!

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வழக்குக்குக்கா சென்ற வயோதிப தாய் ஒருவரின் பணத்தை, நீதி மன்ற வளாகத்திற்குள் வைத்தே நபர் ஒருவர் கொள்ளையடித்து சென்ற நிலையில் குறித்த வயோதிப தாய் கதறியழுத காட்சி அங்கிருந்த பலரையும் கவலையடைசெய்துள்ளது.

பணக்கொடுக்கல் வாங்கல் பிணக்குக்காக நீதிமன்றம் சென்ற வயோதிப தாய், ஒருவருக்கு பணத்தை தபால் நிலையத்தில் காசுக்கட்டளையாக செலுத்தி பற்றுச்சீட்டை நீதிமன்றில் சமர்ப்பிக்கும்படி நீதவான் கட்டளை பிறப்பித்திருக்கிறார்.

அதற்கமைய பணத்தைசெலுத்துவதற்கு இடம்தெரியாது எங்குபோவது? என்னசெய்வது? என செய்வதறியாது அங்குமிங்கும் அலைந்த தாயை அங்கிருந்த நபர் ஒருவர் அவதானித்துக்கொண்டிருந்தார்.

இதனையடுத்து, குறித்த நபர் தொலைபேசியில் “பச்சைக்கலர் சாறி கட்டின அம்மாவா?” என கதைத்தவாறு நெருங்கி “அம்மா உங்கள்ட இருந்து காச வாங்கி என்னை போய் போஸ்ட் ஆபிஸில் கட்டித்து லோயர் வரசொன்னார் ” என நயவஞ்சகமாக ஏமாற்றி பணத்தை வாங்கி கொண்டு சென்றுள்ளார்.

நீண்ட நேரமாகியும் பணத்தை வாங்கி சென்ற நபர் திரும்பி வராத நிலையில் அந்த தாய் தனது சட்டத்தரணியிடம் சென்று பணம்கட்ட நீங்கள் அனுப்பிய தம்பி இன்னும் வரயில்லையே என்றிருக்கிறார், சட்டத்தரணி நான் யாரை அனுப்பியது ? என்ற கேள்வியுடன் நடந்ததை விசாரித்திருக்கிறார்.

அப்போதுதான் குறித்த வயோதிப தாய்க்கு நடந்திருப்பதை உணர முடிந்திருக்கிறது, தனது பணம் பறிபோய்விட்டது என கதறியழுத பாதிக்கப்பட்ட தாய் நீதிமன்ற வளாகத்தையே ஒருசில நிமிடம் கவலையடை செய்துள்ளார்.

பட்டப்பகலில் பாதுகாப்பு நிறைந்த நீதி மன்ற வளாகத்துக்குள் நடைபெற்ற திருட்டு கைவரிசை நீதிபதியின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.

இது போன்ற சம்பவங்கள் இதற்கு முன்பாகவும் குறித்த நீதி மன்ற வளாகத்திற்குள் பல தடவைகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் நீதிபதி பாதிக்கப்பட்ட தாயை பொலிஸில் முறைப்பாடு செய்ய ஆலோசனை வழங்கியதோடு சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸாரை பணித்துள்ளார்.