சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் முல்லைத்தீவில் பாரிய ஆர்ப்பாட்டம்!

Report Print Varunan in சமூகம்

சர்வதேச மனித உரிமைகள் தினமான நாளை முல்லைத்தீவு மண்ணில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதிகோரி தமிழர் தாயகத்தினைச் சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கவுள்ளனர்.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தையும், முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டத்தின் 1008வது நாளையும் பிரதிபலிக்கும் முகமாக நடைபெறவுள்ள இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் காலை 10 மணிக்கு முல்லைத்தீவு நகரத்தில் உள்ள புனித இராஜப்பர் தேவாலயத்திற்கு அருகாமையில் ஆரம்பமாகவுள்ளது.

அங்கிருந்து முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் வரையில் பேரணியாக செல்லவுள்ளதோடு, செயலகத்திற்கு முன்னால் தமது வலியுறுத்தல்களை வெளிப்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

அத்துடன் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவினர்களின் கோரிக்கைள் உள்ளடங்கிய மனுவினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பி வைப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் கையளிக்கப்படவுள்ளது.

மேலும் இந்த போராட்டத்தின் போது, வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புக்கூறலை அரசாங்கம் செய்வதற்காக அந்த விடயத்தினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் ஒப்படைப்பதற்குரிய நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையும், சர்வதேச நாடுகளும் கூட்டிணைந்து எடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தப்படவுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தின் தலைவி ஈஸ்வரி மரியசுரேஸ் அனைவரையும் போராட்டத்தில் பங்கேற்குமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.