தேயிலை தினத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்படாமை கவலைக்குரியது! அருட்தந்தை சக்திவேல்

Report Print Thirumal Thirumal in சமூகம்

சர்வதேச மனித உரிமைகள் தினத்திற்கு கொடுக்கின்ற முக்கியத்துவம் சர்வதேச தேயிலை தினத்திற்கு கொடுக்கப்படாமல் இருப்பது கவலைக்குரிய விடயமாகும் என மலையக மக்களின் மாண்பை உறுதிப்படுத்துவோம் என்ற அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ஆம் திகதி சர்வதேச தேயிலை தினத்தினை ஹட்டனில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹட்டனில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சர்வதேச மனித உரிமைகள் தினத்திற்கு கொடுக்கின்ற முக்கியத்துவம் சர்வதேச தேயிலை தினத்திற்கு கொடுக்கப்படாமல் இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

இந்த தேயிலை தினம் தொழிலாளர்களுடைய வாழ்க்கை வரலாற்றில் பெருமை சேர்க்கின்ற ஒரு தினம் மட்டுமல்லாமல் இந்த மக்களுடைய எழுச்சி நாள், வெற்றி நாள், அதனை உறுதிப்படுத்தும் முகமாக 2005ஆம் ஆண்டு சர்வதேச தேயிலை தினத்தை சர்வதேசமே அங்கீகரித்தது.

சர்வதேசம் அங்கீகரித்த பல தினங்கள் மக்கள் மத்தியிலே பிரபல்யமாக இருக்கின்ற இந்த காலகட்டத்தில் சர்வதேச தேயிலை தினம் என்பது அது சார்ந்த தொழிலாளர்களுக்கு தெரியாமல் இருப்பது வேதனைக்குரிய விடயமாகும்.

பொதுவாக அனைத்து தொழிற்சங்கங்களுக்கும், கட்சிகளுக்கும், அரச சார்பற்ற நிறுவனங்களும் இந்த சர்வதேச தேயிலை தினத்தில் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளோம்.

உழைக்கும் மக்களை கௌரவிக்க வேண்டும். இதனால் அனைத்து தரப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...