அச்சத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்

Report Print Vanniyan in சமூகம்

காணாமலாக்கப்பட்ட எமது உறவுகளை தேடும் நாமும் எமக்கு உறுதுணையாக இருப்பவர்களும் காணாமலாக்கப்படுவோமோ என்கின்ற அச்சநிலை தோன்றியுள்ளது என வடக்கு, கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச மனித உரிமைகள் நாளான இன்று முல்லைத்தீவில் இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்ட மகஜரில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கை வருமாறு,

நாங்கள் 1000 நாட்களையும் தாண்டி எமது உறவுகளை தேடிக்கொண்டிருக்கும் அப்பாவி வயோதிப பெற்றோரும் மனைவி மற்றும் பிள்ளைகளுமாவோம்.

இன்று சர்வதேச மனித உரிமைகள் தினமாகும். எமது பிள்ளைகளின் வாழும் உரிமை மறுக்கப்பட்ட நிலையிலும் நாம், பிள்ளைகள் மற்றும் உறவுகளுடன் வாழும் உரிமை மறுக்கப்பட்ட நிலையிலும் 1024 நாட்களாக வீதியில் நிற்கின்றோம்.

எமது உறவுகளில் பலரை இறுதியுத்தத்தின் முடிவின்போது இராணுவத்திடம் கையளித்தோம். பலர் எம் முன்னிலையில் இராணுவத்திடம் சரணடைந்தனர். சிலர் சோதனைச் சாவடிகளிலும் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையிலும் அழைத்துச் செல்லப்பட்டு காணாமலாக்கப்பட்டனர்.

இலங்கையின் புதிய ஜனாதிபதி பாதுகாப்புச் செயலாளராக இருக்கும்போதே இவை நடைபெற்றன.

ஒரு நாளேனும் புலிகள் அமைப்பில் இருந்திருந்தாலோ அல்லது அவர்களிடம் பணிபுரிந்தாலோ சரணடையுமாறும் அவர்களுக்கு புனர்வாழ்வளித்து விடுதலை செய்வதாகவும் இராணுவத்தினரும் அரசாங்கமும் அளித்த வாக்குறுதியை நம்பியே எமது உறவுகளை கையளித்தோம்.

அவர்கள், யுத்தம் முடிவடைந்த பின்னர் கையளிக்கப்பட்டதனால் எங்காவது இரகசிய முகாம்களில் வைக்கப்பட்டிருக்கலாம் என உறுதியாக நம்புகின்றோம். நாம் எமது பிள்ளைகளை கையளித்த இராணுவத்திற்கு பொறுப்பாக இருந்தவர் தற்போது ஜனாதிபதியாக உள்ளார்.

அவருக்கு எமது பிள்ளைகளின் இன்றையநிலை நன்கு தெரியும். எனவே புதிய ஜனாதிபதி எமது உறவுகளை விடுதலை செய்வதற்கு சர்வதேசம் உதவி புரியவேண்டும். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுள் ஒப்படைக்கப்பட்டவர்கள்,கைதுசெய்யப்பட்டவர்கள் தவிர வெள்ளைவானிலும் சிவில் உடையில் வந்தவர்களாலும் கடத்திச்செல்லப்பட்டவர்களும் உள்ளனர்.

கடத்தப்படும்போது சாட்சியாக உடனிருந்தவர்கள் இன்னமும் உள்ளனர். அண்மைய காலங்களில் நடைபெற்றுவரும் சம்பவங்கள் ஊடாக வலிந்து காணாமலாக்கப்பட்ட எமது உறவுகளை தேடும் நாமும் எமக்கு உறுதுணையாக இருப்பவர்களும் காணாமலாக்கப்படுவோமோ என்கின்ற அச்சநிலையினை தோற்றுவித்துள்ளது.

அதனை உறுதி செய்யும் விதமாக புலனாய்வாளர்களின் கண்காணிப்பு, பின்தொடர்தல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன.

எம்மை பின் தொடர்வதும் விசாரணைக்குட்படுத்துவதும் எம்மை அச்சமடைய வைத்துள்ளன. வீடுகளுக்குள் வந்து விசாரணை செய்வது மட்டுமல்லாது வேண்டுமென்றே தாக்குதல்கள் நடாத்தி விட்டு தப்பிச்செல்கின்றனர்.

இதற்கு பொலிசில் முறைப்பாடு செய்தும் பயனேதும் இல்லை. மாறாக அச்சுறுத்தல் அதிகரிக்கின்றன.

எம்முடன் இணைந்து உறவுகளை தேடி போராடிய 56 பேரை போராட்டம் தொடங்கியதில் இருந்து இழந்து விட்டோம்.

இந்நிலையில் எமது போராட்டத்தை தொடர்வதற்கே போராட வேண்டியநிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஜெனிவாவில் கொண்டு வரப்பட்ட 30ஃ1க்கு எமது வேண்டுகோளையும் மீறி 304 மற்றும் 34ஃ1 ஆகிய பிரேரணைகள் மூலம் இருதடைவைகள் காலநீடிப்பு வழங்கப்பட்டது.

2018 மார்ச்சில் வழங்கப்பட்ட இரண்டு வருடகால அவகாசம் ஒருவருடம் ஒன்பது மாதங்கள் கடந்த நிலையிலும் ஆக்கபூர்வமாக எதுவுமே நடைபெறவில்லை. மாறாக ஐரோப்பிய யூனியன் உட்பட பல நாடுகளால் OMP அலுவலகத்தின் ஊடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட நிதிகள் எவையும் மக்களை சென்றடையவில்லை.

மாறாக OMP அலுவலகத்தையும் அதைசார்ந்தவர்களையும் பலப்படுத்துவதற்கு மட்டுமே பயன்படுகின்றது. OMPஅலுவலகமானது பாதிக்கப்பட்ட மக்களின் ஆலோசனையை பெற்றுக்கொள்ளாது உருவாக்கப்பட்டதுடன் பாதிக்கப்பட்ட மக்களினால் புறக்கணிக்கப்பட்டு தோல்வியடைந்த அலுவலகமாகும்.

மேலும் ஜெனிவா தீர்மானத்தினை மாற்றியமைப்போம் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் பகிரங்கமாக அறிவிக்கின்றார்.

இந்நிலையில் சர்வதேசம் எவ்வாறு எமக்குநீதியை பெற்றுத்தரப்போகின்றது? மேலும் காலநீடிப்பு வழங்காது சர்வதேசத்தின் நேரடிதலையீட்டுடனான நீதியை எமக்கு பெற்றுத்தருவதற்கு சர்வதேசம் முயற்சிக்கவேண்டும்.

இரகசிய முகாம்களில் உள்ள எமது உறவுகளை விரைவில் மீட்டுத்தர ஐநா முயற்சிக்க வேண்டுமென வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாம் மன்றாட்டத்துடன் கேட்டுநிற்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest Offers

loading...