சக வாழ்வு ஏற்பட விழுமியங்கள் எல்லா சமயங்களிலும் வாழ வேண்டும்!

Report Print Ashik in சமூகம்

பொதுவான விடயங்களில் நாங்கள் ஒற்றுமைப்பட்டு ஒன்றாக வாழ முயற்சிக்கின்ற போது நமது வேற்றுமைகளை களைந்து ஒரு சமய, சமூக, சக வாழ்விற்கான பாதைகளை கண்டு கொள்ளக்கூடியதாக அமைந்திருக்கும் என மன்னார் கரிற்றாஸ் வாழ்வுதய இயக்குனர் அருட்தந்தை எஸ்.அன்ரன் அடிகளார் தெரிவித்துள்ளார்.

மன்னார் - நானாட்டான் அளவக்கை கார்மேல் மாதா ஆலய கேட்போர் கூடத்தில் இன்று காலை முஹம்மது நபி (ஸல்)வின் பிறந்த தின விழா நடைபெற்றது.

இதன் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,

சமயங்களினுடைய விழாக்களை கொண்டாடுவதன் நோக்கம், ஏன் அந்தந்த சமயங்கள் விழாக்களை கொண்டாடுகின்றார்கள்? அதனுடைய முக்கியத்துவம் என்ன? அதிலிருந்து ஏனைய சமயத்தவர்கள் கற்றுக்கொள்ளக்கூடிய விடயம் என்ன?

இந்த விழாவின் ஊடாக சமயங்கள் சொல்லுகின்ற செய்தி என்ன என்பதை எல்லாம் விளங்கிக் கொண்டு ஒரு சமயத்தை இன்னும் ஒரு சமயத்தை பின் பற்றுகின்றவர்கள் மதிக்க வேண்டும்.

அவர்களுடன் நல் உறவோடு வாழ வேண்டும் என்பது தான் இந்த விழாக்களை நாங்கள் சர்வமத அமைப்பினூடாக கொண்டாடுவதன் நோக்கமாகும்.

அனைவருடைய கருத்துக்களையும் பார்க்கின்ற போது எல்லா சமயங்களுக்கும் பொதுவான விழுமியங்களாக அக்கருத்துக்கள் அமைந்திருக்கின்றது.

இந்த விழாக்களை கொண்டாடுகின்றதன் நோக்கம் இன்றைய நாளிலே நிறைவேறி உள்ளது என்ன என்றால் நல்ல விழுமியங்கள் தான் மனிதர்களை நல்லவர்களாக இந்த உலகத்திலே வாழ வைக்கின்றது.

ஒற்றுமை,சகோதரத்துவம், சக வாழ்வு ஏற்பட வேண்டும் என்றால் விழுமியங்கள் எல்லா சமயங்களிலும் வாழப்பட வேண்டும்.

ஒரு சமயத்திற்கு அந்த சமயத்திற்கு உரித்தான விழுமியங்கள் தனிப்பட்ட முறையில் இருந்தாலும் பல விழுமிங்கள் பொதுவானதாக இருக்கின்றது.

பொதுவான விடயங்களில் நாங்கள் ஒற்றுமைப்பட்டு ஒன்றாக வாழ முயற்சிக்கின்ற போது நமது வேற்றுமைகளை களைந்து ஒரு சமய, சமூக, சக வாழ்விற்கான பாதைகளை கண்டு கொள்ளக்கூடியதாக அமைந்திருக்கும் என்பது என்னுடைய நம்பிக்கையாக இருக்கின்றது.

நான்கு அல்லது ஐந்து கிராமங்களை உள்ளடக்கி மேற்கொள்ளுகின்ற சிறிய முயற்சிகள் பெரிய அளவில் வளர்ச்சி அடைவதற்கு நீங்கள் ஒவ்வெருவரும் முயற்சிகளை எடுத்து ஒற்றுமையை மற்றவர்களுக்கு காட்டுகின்ற பொழுது சமயத்தைக் கடந்த சகவாழ்வை, சகோதரத்துவத்தை நம் மத்தியில் ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

சக வாழ்வு என்றால் எமது சமயங்களை விட்டு விட்டு வருவது என்ற அர்த்தம் இல்லை. எங்களுடைய சமயங்களை நல்ல முறையில் நாங்கள் பின் பற்றி அதனூடாக வரக்கூடிய நல்ல விழுமியங்களை ஒட்டு மொத்தமாக நாங்கள் வாழ முயற்சிக்கின்ற போது சமயத்தைக் கடந்த சக வாழ்வு நம் மத்தியிலே உருவாகும்.

எவ்லோரும் சமமானவர்கள். எமக்கு மத்தியில் உள்ள உயர்வு, தாழ்வுகளை களைந்து எனது சமயம் தான் முக்கியம் என்கின்ற மன நிலைகளை களைந்து ஒற்றுமைப்படுகின்ற விழுமியங்களிலே நாம் இணைந்து சமய சகவாழ்வை உருவாக்குவதற்கு இத்தகைய விழாக்கள் எமக்கு உறுதுணையாக அமைய வேண்டும்.

இங்கு வந்துள்ள சர்வ மதத் தலைவர்கள் ஒன்றிணைந்து மேடையில் இருப்பது என்பது மிகப்பெரிய ஒரு அடையாளம். இங்கிருந்துதான் மக்களுக்கு விடயம் கொண்டுச் செல்லப்படுகின்றது.

மேடையில் இருக்கின்ற சமயத் தலைவர்கள் எல்லாம் ஒன்றிணைந்து செயல்பட்டு ஒற்றுமையையும், சக வாழ்வையும் முன்னெடுத்துச் செல்வதற்கு எல்லோரும் முயற்சிக்க இறைவன் துணை புரிய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், மௌலவிகள், சர்வமத குழுக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...