மழை ஓயும் வரை நிரந்தர இடம் கோரும் நாவற்குடா மக்கள்

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு, மண்முனை, நாவற்குடா பகுதியில் மழை ஓயும் வரையில் தங்களை நிரந்தரமான இடத்தில் தங்கவைப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழையினால் தாழ்நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன் மக்கள் இடம்பெயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரம் பெய்த மழையினால் இடம்பெயர்ந்த மக்கள் தமது இருப்பிடங்களுக்கு திரும்பிய நிலையில் நேற்று காலை முதல் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாவற்குடா கிழக்கு பகுதிக்கு மீண்டும் மக்கள் இடம்பெயரும் நிலையேற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இடம்பெயர்ந்து மீண்டும் வீடு வந்து மீண்டும் இடம்பெயரும் நிலையேற்பட்டுள்ளதாகவும், மழை ஓயும் வரையில் தங்களை நிரந்தரமான இடத்தில் தங்க வைக்குமாறும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் தாம் கடந்த 30 வருடமாக மழை காலங்களில் அகதி வாழ்க்கையையே எதிர்கொண்டுவருவதாகவும் தமது பகுதிக்கான வடிகான் வசதிகளை ஏற்படுத்தி தமது பிரச்சினையை தீர்க்க உரிய அதிகாரிகள் நடவடிக்கையெடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.