வவுனியா வடக்கு பிரதேச சபையின் பாதீடு தோற்கடிப்பு

Report Print Theesan in சமூகம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வசமுள்ள வவுனியா வடக்கு பிரதேச சபையின் 2020ஆம் ஆண்டிற்கான பாதீடு பெரும்பான்மை வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.

வவுனியா வடக்கு பிரதேசசபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் இ.தணிகாசலம் தலைமையில் இன்றைய தினம் இடம்பெற்றிருந்தது.

இதன்போது சுதந்திரகட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முண்ணணி, தமிழர் விடுதலை கூட்டணி, ஐக்கிய தேசிய கட்சி, பொதுஜன பெரமுன, சுஜேட்சை குழு ஆகியவற்றை சேர்ந்த 25 உறுப்பினர்கள் சபையில் பிரசன்னமாகியிருந்தனர்.

மக்கள் விடுதலை முண்ணியின் உறுப்பினர் ஒருவர் சமூகமளித்திருக்கவில்லை. இதன்போது வரவு செலவு திட்ட விவாதம் இடம்பெற்று வாதப்பிரதி வாதங்கள் கடுமையாக இடம்பெற்றிருந்தன.

சபையின் கடந்த 2019 ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் தவிசாளர் தனது பகுதிக்கே முக்கியத்துவம் வழங்கியதுடன் இம்முறை வரவு செலவு திட்டத்திலும் மக்கள் சார்பான வேலைத்திட்டத்திற்கு போதியளவு நிதி ஒதுக்கப்படவில்லை என பல்வேறு உறுப்பினர்களால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அனேக உறுப்பினர்களின் எதிர்ப்பினால் வரவு செலவு திட்டம் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. பாதீட்டுக்கு எதிராக தமிழர் விடுதலை கூட்டணி, பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசிய கட்சி, சுதந்திர கட்சி, தமிழ் தேசிய மக்கள் முண்ணனி, சுயேட்சை குழு ஆகியவற்றை சேர்ந்த 17 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

பாதீட்டுக்கு ஆதரவாக தமிழ்க் கூட்டமைப்பை சேர்ந்த 7 பேர் வாக்களித்ததுடன், தமிழ்க் கூட்டமைப்பை (ரெலோ) சேர்ந்த சபையின் உபதவிசாளர் யோகராசா நடுநிலைமை வகித்திருந்தார். இதனால் சபையின் பாதீடு பெரும்பான்மை வாக்குகளை பெற்று தோல்வியடைந்தது.

இது தொடர்பாக சபையின் தவிசாளார் இ.தணிகாசலத்திடம் கேட்டபோது, எமது சபையின் வருமானத்திற்கு ஏற்பவே வரவு செலவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 2019ஆம் ஆண்டிற்கான சில அபிவிருத்தி திட்டங்கள் எமது நாடாளுமன்ற உறுப்பினர்களூடாக வழங்கப்பட்ட கம்பரெலிய நிதி ஊடகாவே செய்யப்பட்டது.

எனவே இவர்களது குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானது அது அரசியல் காழ்ப்புணர்சி கொண்டது. எம்மை குற்றம் சாட்டி அரசியல் இலாபம் தேட அவர்கள் முனைகின்றார்கள். நாம் எமது மக்கள் சார்பாகவே செயற்பட்டு வருகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.