உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாரிய அழுத்தங்களை சந்தித்த பொலிஸார்: ஆணைக்குழுவில் சாட்சியம்

Report Print Banu in சமூகம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்ய அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று பல பொலிஸ் அதிகாரிகள் சாட்சியமளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிர்த்த ஞாயிறு அன்று நடைபெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தொடர்சியாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

இவ் விசாரணை ஆணைக்குழுவின் நேற்றைய விசாரணையின் போதும் பொலிஸ் அதிகாரிகள் பலர் சாட்சியம் வழங்கியிருந்தனர்.

இதன்போது பிரதி பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.எம். லஹிரு பிரதீப் உதயங்க சாட்சியம் அளிக்கையில், தாக்குதல் நடத்தப்பட்டு 2 நாட்கள் கடந்த நிலையில், கொழும்பு வடக்கு பகுதிக்கு பொறுப்பாக இருந்த பொலிஸ் அத்தியட்சகர் சஞ்சிவ பண்டார, தாக்குதல் தொடர்பில் முன்கூட்டியே அறிந்திருந்தாக பொலிஸ் முறைப்பாட்டு புத்தகத்தில் பதிவிடுமாறு தமக்கு அழுத்தங்களை பிரயோகித்ததாக தெரிவித்துள்ளார்.

இதன் போது தாக்குதல் தொடர்பில் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருக்கவில்லையா என அரச சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவர் அவரிடம் வினவியுள்ளார்.

அதற்கு , தாக்குதல் நடத்தப்பட்டு 2 நாட்களின் பின்னர் பொலிஸ் அத்தியட்சகர் சஞ்சிவ பண்டார தம்மை அவரின் அலுவலகத்திற்கு அழைத்ததாக பதிலளித்துள்ளார்.

அவ்வாறு அழைத்து தாக்குதல் தொடர்பான பதிவு ஒன்றை ஜம்பட்டா வீதியில் உள்ள பாதுகாப்பு காவலரண் முறைப்பாட்டு புத்தகத்தில் பதிவிடுமாறு கேட்டதாகவும் , அவ்வாறு பதிவிட மறுப்பு தெரிவித்தமையால் தான் மோதர பொலிஸ் நிலையத்தில் இருந்து வாரியபொல பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் ஆணைக்குழுவில் கூறியுள்ளார்.

இதற்கும் மேலதிகமாக ஏ.எல். நளீன் பண்டார, பொலிஸ் பரிசோதகர் ஏ.எச்.எம். சிறிசேன அபேசிங்க உள்ளிட்டோரும் ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியம் அளித்துள்ளனர்.

இதேவேளை, கொழும்பு வடக்கு பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான உதவி பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் எல்.எச். மஹிந்த கருணாரத்ன உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் இன்றையதினம் ஆணைக்குழுவில் சாட்சியம் அளிக்கவுள்ளனர்.