வவுனியாவிலும் சுவரோவியங்கள்! களத்தில் குதித்த சிவில் பாதுகாப்பு படையும், இளைஞர்களும்

Report Print Thileepan Thileepan in சமூகம்

ஜனாதிபதியின் அழகான இலங்கை எனும் திட்டத்தின் கீழ் வவுனியாவிலும் சுவரோவியங்கள் வரையும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கடந்த சில வாரங்களாக நாடளாவிய ரீதியில் இளைஞர்கள் பலர் ஒன்றிணைந்து நகரங்களிலும் அதனை சூழ உள்ள பிரதேசங்களிலும் இருக்கும் சுவர்களை வண்ணமயமாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வவுனியாவில் சிவில் பாதுகாப்பு குழு, பொதுமக்கள், இளைஞர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், வர்த்தக சங்கத்தினர் இணைந்து சுவரோவியம் வரையும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் அடிப்படையில் வவுனியா காமினி மகா வித்தியாலய சுற்று மதிலில் சிவில் பாதுகாப்பு பிரிவினர் மற்றும் பொதுமக்கள், இளைஞர்கள் இணைந்து சுவரை சுத்தம் செய்து ஓவியங்கள் வரையும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அத்துடன் வவுனியா பழைய பேருந்து நிலையத்தின் சுவர்களில் வவுனியா வர்த்தக சங்கத்தினருடன் இணைந்து பல்கலைக்கழக மாணவர்கள் ஓவியங்கள் வரையும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

ஜனாதிபதியின் திட்டத்திற்கு அமைய வவுனியாவில் பரவலாக முன்னெடுக்கப்பட்டுளன இந்த நடவடிக்கையில் பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளனர்.

இதனை சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின முன்னாள் பணிப்பாளரும், ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியுமாகிய கேணல் ரத்ன பிரிய பந்து பார்வையிட்டு, தேவையான ஆலோசனைகளையும், உதவிகளையும் வழங்கி வருகியுள்ளார்.